Wednesday, February 9, 2011

புரை ஏறும் மனிதர்கள் - பதினான்கு

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள்- மூன்று

ஒன்று, இரண்டு.


தூங்கிக் கொண்டிருந்த கட்டிலை யாரோ உலுக்கிக் கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டு விழித்தேன். கட்டிலைச் சுற்றி எட்டுப் பத்து ஆட்டுக் குட்டிகள்!.. உதறி எழுந்து வட்ட சம்மணம் கூட்டி அமர்ந்தேன். "அறிவண்ணனுக்கு பலிக்கொடை தர வந்திருக்கோம்" என்றதுகள் குட்டிகள் கோரசாய்.

"அவர் வீட்ல இல்லை. வேட்டைக்குப் போயிட்டாரு" என்றேன். "வந்தா இந்த கார்டை கொடுங்க. வரச் சொல்லுங்க" என்று விசிட்டிங் கார்டு மாதிரி ஒரு கார்டை கொடுத்தது ஒரு குட்டி.. 'தல'க்குட்டி போல! "கோழிகளெல்லாம் வந்தாலும் வருங்க. வந்தா எங்கட்ட பாலிசி எடுத்துட்டாரு அண்ணன்னு சொல்லிருங்க" என்றதுகள். 'ஆகட்டும்' என்றேன் அவசரமாய். விடை பெற்றதுகள் குட்டிகள். ஒரு குட்டி மட்டும் போகாமல் பாவமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. "உனக்கென்ன?" என்றேன்.

உற்சாகம் பெற்ற குட்டி, கட்டிலுக்கு தாவி, அருகில் அமர்ந்து கொண்டது. சற்றுப் பயமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல், "கட்டிலுக்கெல்லாம் வரக் கூடாது" என்றேன். முகம் சோம்பி, அழும் தருவாயில், " எண்ட அப்புப்பாவுக்கு ஒரு ஆடு உண்டாயிருண்ணு" என்ற குட்டியின் குரல் நம்பியார் சேட்டாவின் குரலை ஒத்திருந்தது.

"நீ சவுதியில் வேலை பார்த்தியா?" என்றேன். பதில் சொல்லாமல், " அண்ணே, அண்ணே" என பிராண்டத் தொடங்கி விட்டது குட்டி. மீண்டும் விழித்த போது, " அண்ணே, அண்ணே" என விடாமல் பிராண்டிக் கொண்டிருந்தான் சுரேந்தர். என்ன எழவுக் கனவுடா இது! "நல்லவேளை.. எழுப்பின சுரேந்தர்" என்றேன்.

" அண்ணே.. நீங்க திடீர்ன்னு கவிஞராயிட்டீங்கலாம்ல?" என்றான் கொட்டிக் கவுத்தியது போல்.

" யார்டா சொன்னா?"

" முத்தண்ணந்தான் சொன்னுச்சு"

" திடீர்ன்னு சொன்னானா?"

"இல்லைண்ணே. ஆற அமரத்தான் சொன்னுச்சு. அப்ப நீங்க தூங்கிட்டுருந்தீங்க"

" திடீர்ன்னு கவிஞர் ஆயிட்டதா சொன்னானாடான்னா?"

"அதை விடுங்கண்ணே. ஒரு கவிதை சொல்லுங்கண்ணே" என்றான் நடுச்சாமத்தில், சற்றும் இரக்கம் இல்லாமல். முத்துராமலிங்கத்தைப் பார்த்தேன். முன் இருக்கையில் இருந்தவன், 'இருக்கிறேன்' என்பதாக குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். "அண்ணே கவிதைண்ணே" என்ற சுரேந்தரை 'திடீர்'ன்னு ஏனோ பிடித்து வந்தது. ஏமாற்ற மனமில்லை.

"முன் இருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
குறட்டை பிரிந்து கொண்டிருந்தது
தூங்க முடியவில்லை" என்று சுரேந்தரைப் பார்த்தேன்.

"இது கல்யாண்ஜி கவிதைண்ணே. கடைசியில் கூட தாங்க முடியலைன்னு முடியும்" என்றான்.

சுத்தமாய் தூக்கம் விலகி விட்டது எனக்கு. 'ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டோமோ?' வென கவலை பிடித்துக் கொண்டது. நாளைக்கு, எனக்குப் போக கூடுதலாக ஒரு குவாட்டர் வாங்க வேணுமே என யோசனையும் தோன்றியது.

"அண்ணே, உங்க கவிதையை சொல்லுங்கண்ணே" என்ற சுரேந்தரை முதல் முறையாக ஊன்றிக் கவனித்தேன். இருட்டாகத்தான் இருந்தான். 'இவனை பாம்புன்னு தாண்ட முடியல. பழுதுன்னு மிதிக்க முடியலையே' வென நினைத்த படியே, "தலை வலிக்குதுடா. அடுத்த ஊரில் நிறுத்தச் சொல்லி, டீ சொல்லு" என்றேன்.

" நல்லாருக்குண்ணே. ஆனா, ஓவர் யதார்த்தமா இருக்குண்ணே. இதையே,

" ஒரு டீ சொல்லு
நிறுத்திய ஊரில்
அடுத்த தலைவலிக்கு" ன்னுசொல்லிப் பாருங்களேன். புதுசா இருக்கும்" என்றான்.

"டேய் முத்து, எந்திரிடா" என்று உலுக்கி எழுப்பினேன், முத்துராமலிங்கத்தை. " நாலஞ்சு கிலோ தேறும் மாப்ள. யாரும் பாக்குறதுக்கு முன்னால டிக்கியில் தூக்கிப் போடு" என்று எழுந்த பிறகும் சுற்றும் முற்றும் பார்த்தபடி புலம்பினான். ' சரித்தான்! அறிவு படத்தைத்தான் இவனும் ஓட்டிக் கொண்டிருந்தான் போல' என்று நினைத்துக் கொண்டேன்.

" மாமா, சிங்கப்பூர் வழியா போயிருவோமா? ஏழு கிலோமீட்டர் குறையும்" என்றான் அறிவு இடையில்.

" சிங்கப்பூர் வழியாவா?"

" சிங்கம்புனரி வழியா மாமா!"

" என்னவோ செய்ங்கடா. முதல்ல டீ சாப்பிடனும். ஒரு இடத்தில் நிறுத்து" என்றேன். " இதையேண்ணே.." என மீண்டும் தொடங்கினான் சுரேந்தர், விடாமல். " சுரேந்தர்! உன்னையும்தான். நிறுத்து!" என்றேன். டீயெல்லாம் வாங்கிக் கொடுத்து, ' சிவகங்கை நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்கிற போர்டை கண்ணில் காட்டி விட்டான்கள் பயல்கள்.

கார்க் கண்ணாடியை திறந்து விட்டேன். என் மண்ணுக்கே உரிய கருவேலம் பூ வாசனை!

மார்கழி மாத அதிகாலை பூஜைக்கு அப்பாவுடன் போகிறது போல் இருந்தது. ஒரு வாசனை இழுத்துச் சென்று சேர்க்கிற இடம் ஒரு மனிதமாக இருக்கிற போது... அம்மனிதம், இல்லாத நம் அப்பாவாக இருக்கிற போது, கண்ணில் நீர் துளிர்த்து விடுகிறது.

" அப்பா" என்றேன் சிவகங்கையை!

"ஏழு கடையில் நிறுத்து மாப்ள. ஒரு தம் போட்டுட்டு போகலாம்" என்றேன் அறிவிடம். இந்த எழுகடை, என் வாழ்வின் மிகப் பிரதானம் வகிக்கும் ஒரு இடம். வீட்டில் இருப்பதற்கு இணையாக இந்த ஏழு கடையிலும் இருப்பது உண்டு நான். மனசு ஒன்றிப் போகிற எந்த இடமும் வீடுதானே!

இறங்கி, ஒரு தம் பற்ற வைத்துக் கொண்டு, " வந்துட்டேன் மக்கா" என்றேன் ஏழு கடையைப் பார்த்து. பொம் என்கிற அதிகாலை மூச்சை விட்டபடி படுத்துக் கிடந்தது ஏழுகடை. " பொறவு வர்றேன்..கேட்டியா?" என்றபடி அங்கிருந்தும் கிளம்பினேன்.

தெருத் திரும்பினோம். வீட்டில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. காம்பவுண்ட் சுவரை பிடித்தபடி தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் மஹாவும் சசியும். கார்க் கதவைத் திறந்து இறங்கியபோது வாயெல்லாம் பல்லாக குழந்தைகள் வந்து கட்டிக் கொண்டார்கள். " புதுப் பெண்ணே" என்றேன் மஹாவைப் பார்த்து. " போங்கப்பா" என்று புதுச் சிரிப்பு சிரித்தாள்!

வாசலை அடைத்து கோலம் போட்டு, தலையில் , ' velkame' என்று எழுதி இருந்தாள் லதா. (இந்த இரண்டு வருடத்தில் ஃபிரன்ச் கற்றுக் கொண்டாளோ என்னவோ?) "கவிதா, சீத்தா, வாங்கடி. வந்துட்டாரு" என குரல் கொடுத்தாள். எதிர் வீட்டிற்கு. " நில்லுங்கண்ணே" என சிரித்தபடி ஓடி வந்தார்கள் எதிர் வீட்டுக் கவிதாவும், சீத்தாவும்.

ஆரத்தி!

இது நாலாவது ஆரத்தி. இந்த நாலு பயணங்களிலும் மூணு ஆரத்தி. (அப்பா இறந்து போன பயணம் ஒண்ணு). ஒரு ஆரத்தி ரொம்ப பழசு. முதல் ஆரத்தியும் கூட!.. மாலையும் கழுத்துமாக மணமகனாக இருந்த போது...

பழைய மணமகளை பார்த்தேன். பழைய சிரிப்பு சிரித்தாள்!

மிக கூச்சமான தருணங்களில், இந்த ஆரத்திக்கு மனுஷனாக நிற்கிற தருணமும் ஒன்று. சிரிப்பு சிரிப்பாக வரும். அடக்கிக் கொண்டு நிற்க வேண்டியது வரும். வலம், இடமாக சுற்றி வெற்றிலை நீரை வாசலுக்குக் கொண்டு போய் கொட்டப் போனார்கள் கவிதாவும், சீத்தாவும்.

"பொட்டு?" என்றேன் அவர்களை திரும்பிப் பார்த்து. " ஐயோ...சாரிண்ணா, மறந்துட்டோம்" என சிரித்து, தட்டைத் தொட்டு பொட்டு வைத்துத் தந்தது கவிதா. "இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆரத்தி காசு கொடுங்க அவள்களுக்கு" என சிரித்தபடி,..

"ஆல்-ரியல்ஸ்" பந்துகளின் முதல் பந்தை தொடங்கியிருந்தாள்- மனுஷி.

--தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13

Monday, February 7, 2011

புரை ஏறும் மனிதர்கள்- பதிமூன்று

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள்- இரண்டு

முதல், "இங்கு"

***

அப்பேற்பட்ட டிரைவர் இந்த அறிவு!

செல்லமாக, "ஆக்சிடெண்ட் அறிவு' என்போம். "வட்டையை பிடிச்சான்னா மாப்ள 'தட்டாம' வரமாட்டான்" என்கிற வழக்கை சொந்தமாக வைத்திருந்தான். மாப்ள அறிவிற்கு மனிதர்களிடத்தில் எல்லாம் முரண்பாடு இல்லை. ஆடு, கோழி என்றால் கை ஆடிவிடுவான்.

"நாம்பாட்டுக்கு லெ ஃப்ட்ல ஏத்தி போய்க்கிட்ருக்கேன்..க்காலி குறுக்க வந்து விழுகுது" என சவாரி போய் திரும்பும் போதெல்லாம், வெடக் கோழியாகவோ, குரும்பாடாகவோ, டிக்கியில் இருந்து தூக்கிப் போடுவான். "கெடந்தாத்தானே நூல் பிடிச்சு வருவாய்ங்க.. தூக்கிட்டு வந்துட்டா" என்பான். எங்களுக்கும் சரக்குக்கு ஆகிப் போகும். சிலநேரம் நாங்களே கேட்பதுண்டு, " மாப்ள வேட்டைக்கு போகலையா?" என்று.

கிளம்பலாம் என காருக்கு வந்தோம். வண்டிக்குள், சுரேந்தர் படுக்க வைத்த 'S' போல படுத்தும் படுக்காமல் இருந்தான். "சுரேந்தர்!" என்றேன், சிரித்து. "யெஸ்!" என்றான் சைடாக சிரித்து. "சரித்தான்! S-க்கு, யெஸ் சரியாப் போச்சு" என்று நினைத்தபடி முத்துராமலிங்கத்தை பார்த்தேன். "வரும்போதே போட்டுட்டான் மாமா" என்றான். பேஷ்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

வண்டியில் ஏறியதும், "மாப்ள மஹா கல்யாணம் முடிஞ்ச மக்கா நாள் ரோட்ல விட்டு ஏத்திக் கொல்லு. கேக்க மாட்டேன்.மஹா கல்யாணத்துக்கு மொத நாள் போனாக் கூட பாதகமில்லை. உருட்டு போதும்" என்றேன். "அட.. ஏ மாமா நீ வேற" என சிரித்தான்.

மணிஜி என்னுடன் ஏறிக் கொண்டார் . சுந்தர், சரவணன் வாசு காரில். ஊரப்பாக்கம் என நினைவு. நெடுஞ்சாலையில் வண்டியை ஓரம் கட்டி, வாசு கார் பார் ஆனது. சென்னை ஏர்ப்போர்ட்டில் ரெட் லேபில் வாங்கியிருந்தேன். அதை நண்பர்களுக்கு கொடுத்து விட்டு எனக்கு நெப்போலியன் வேணும் என்றேன் வாசுவிடம். " வாங்கிருவோம்" என்ற வாசு, ஆட்டோ எடுத்தார். துடிப்பான பப்ளிசர் தெரியுமா வாசு!

களை கட்டத் தொடங்கியது சபா. எவ்வளவு நாள் கனவு தெரியுமா இது? பின்னூட்டங்களில், அழை பேசியில் தடவித் தடவி உணர்ந்து கொண்டிருந்த முகங்களை கண் நிறைத்து பருகிக் கொண்டிருப்பது. அதுவும் பருகிக் கொண்டிருக்கும்போதே பருகிக் கொண்டிருப்பது!

ரெண்டு ரவுண்டு போய்விட்டால் (இலக்கண சுத்தமாக 'இரண்டு' என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள். இனி, சித்தம் போக்கு, சிவன் போக்குதான்) வாயை கட்டிவிடும் எனக்கு. சும்மா சும்மா சிரித்துக் கொண்டிருப்பேன். வாயை கட்டிய பிறகு எப்படி சிரிப்பீர்கள் என நம் கார்க்கி மாதிரியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. கொடுத்துப் பாருங்கள் தெரியும். சிரிப்பாய் சிரிப்பேன். சிரிப்பாய் சிரிப்பீர்கள்!

சற்று நேரத்திற்கெல்லாம் மயில் ராவணனும், மாப்ள சிவாஜி சங்கரும் வந்து சேர்ந்தார்கள். முதல் பார்வையிலேயே மயில் ராவணனை யாருக்கும் பிடிக்கும்.அந்த யாருக்குள்ளும்தானே நானும் இருக்கிறேன்!.. ("யோவ்.. உனக்கு பிடிக்காத ஆள்ன்னு யாருமே இல்லையா?" கேள்விதானே?.. "ஏன்? இருக்கிறார்களே.. இதோ இந்த அறிவை இப்ப பிடிக்கலை. பத்திரமாய் கண்டு போய் வீடு சேர்த்து விட்டான் எனில் அப்ப பிடிக்கும்". அப்படித்தான்,... அப்பப்ப, அப்படியப்படி!)

எடுத்த எடுப்பிலேயே தோள் மேல் கை போட்டுக் கொண்டு பேசவும் சிரிக்கவும் மயில்ராவணனால் முடிகிறது. பதிலுக்கு நாமும் கை போட்டுக் கொள்ள அவர் தோள் இடம் தருகிறது.

"மாமா.." வென கூச்சலிட்டு கட்டிக் கொண்ட சிவாஜியின் அன்பு அலாதியானது. பேச்சுக்கு பேச்சு மாப்ள கைகளை பற்றிக் கொள்கிறான். கைகளை பற்றிக் கொள்வது கூட யாருக்கும் வந்துவிடும். விரல்களோடு விரல்களை பிணைத்துக் கொண்டு பேச யாருக்காவதுதானே வரும்!

வித்யாவும் (விதூஸ்), பத்மாவும் அழை பேசி விசாரித்தார்கள். நலம் விசாரித்த கையோடு, 'வந்ததும் தொடங்கியாச்சா?' என்பதையும்! கட்டிய வாயை பிரித்துப் பிரித்து பேசியதில் கண்டு பிடித்திருப்பார்கள் போல. ஸ்டெடியாக இருப்பது மாதிரி நடிப்பதில்தான் நம்மை ஸ்டடி பண்ணி விடுகிறார்கள்!

பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவும்-என்கிற பேருந்தின் பின்புற வாசகம் போல் போதிய இடைவெளியில் 'சிவகங்கையான்கள்' கச்சேரி நடத்திக் கொண்டிருந்தான்கள். 'இங்க வாங்கடா' என்று கூப்பிட்டாலும் வரவில்லை. டீசன்சி மெயின்டைன் பண்றான்களாம். போங்கடா.. நீங்களும் உங்க டீசன்சியும். டீசன்சியை தொலைக்கத்தானே குடிப்பதே... ஆக்வர்ட் ஃபெல்லோஸ்!

சரவணா, மணிஜி, சுந்தர், வாசு, 'நீர் விட்டா வளர்த்தோம்?' என புரட்சி வெடிக்கிற தருவாயில், இலக்கியம் வளர்க்க தொடங்கியிருந்தார்கள். வாய் பார்க்க வசதியாக நான் சற்று மேடான இடமாக பார்த்து நின்று கொண்டேன். அவ்வப்போது மணிஜியோ, சரவணனோ, இன்னார் லைனில் இருக்கிறார்கள் பேசுங்கள் என அழை பேசியை என்னிடம் தந்தார்கள். வாங்கும் போதும், பேசும் போதும் நான் சிவகங்கையான்களை ஓரக் கண்ணில் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஊர் போய் சேர்ந்து விட்டால் பைசாவிற்கு மதிக்க மாட்டான்கள். 'கெடைச்ச வரைக்கும் தூத்திக்கடா ராசாராமா' என்பதில் தீவிரமாக இருந்தேன்.

அப்படியான 'இன்னார்' களில், கேபிள்ஜியும், ஈரோடு கதிரும் முக்கியமானவர்கள். பயணம் மற்றும் நலம் விசாரித்து அன்பு செய்தார்கள். மற்ற இன்னார்களில் பாதிப் பேர் ஏர்டெல்-லில் இன்னென்ன வசதி இருப்பது பற்றியும், இந்த பாட்டை காப்பி பண்ண, முப்பது ரூபாய்தான் மாதத்திற்கு என்பது பற்றியும் அறிவுறுத்தினார்கள்.

இடையிடையே முத்துராமலிங்கம் வந்து, "ஆத்தா வையும். சந்தைக்குப போகணும். காசு கொடு" என்பது போல், " ஐத்தை கத்துது மாமா.. கிளம்பியாச்சான்னு" என தொந்திரவு செய்து கொண்டிருந்தான். " ஐத்தை கத்தாட்டிதாண்டா மேட்டரு. கத்துனா கூட ஒரு குவாட்டரு" என பன்ச் வசனம் பேசி என் நாடியை தொட்டுப் பார்த்தேன். தாடி இல்லை. so, நான் அவரில்லை- நல்லவேளை!

ஒரு கட்டத்திற்கு மேல் முத்து வன்முறையில் இறங்கத் தொடங்கி விட்டான். தர தரவென இழுத்துக் கொண்டு போய் வண்டியில் எறிந்து, " கிளம்புடா அறிவு" என்றான். அவ்வளவு போதையிலும் அறிவு என்கிற சொல் கதக் என்றது எனக்கு. பத்திரமாய் ஊர் போய் சேர்ந்துட்டா ஆஞ்சநேயர் கோயிலுக்கு தொழுகைக்கு வருவதாகவும், மதுரைமுக்கு கன்னி மாதாவிற்கு சிதறு தேங்காய் உடைப்பதாகவும், நேரு பஜார் ஜூம்மா மசூதியில் அங்கப் பிரதட்சணம் செய்வதாகவும் கலந்து கட்டி வேண்டுதல் வைத்தேன்.

சற்றும் எதிர் பார்க்காத அளவு , மாப்ள அறிவு நேர்த்தியாக இருட்டை ஊடுருவிக் கொண்டிருந்தான். ஒருவேளை, இருட்டு கூட அவன் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். பயம் மறைந்து உற்சாகம் தொற்றிக் கொள்ள தொடங்கியது. அப்பதான் நினைவு வந்தது, நிலவுக்கு பண்ணிய ப்ராமிஸ்! (நிலவுடன் பேசிக் கொண்டே வீட்டையடையப் போகிறேன்)

"அடடா..சக்கரக் கட்டியை மறந்துட்டனா?" வென நெருங்கி அமர்ந்தேன் நிலவிடம். " தொடாதே" என்றது நிலவு!

"கொடுமையல்லவா தீண்டாமை என்பது.
கொடுமை அல்லவா அதை நீயும் சொன்னது"

"என்ன மாமா?" என்றான் முத்துராமலிங்கம்.

"என்ன மாப்ள?"

"பாட்டுலாம் பறியுது?"

"வாய் விட்டு பாடிட்டனாடா?"

"பரவால்ல பாடு. ஆனா முதல்லருந்து பாடு"

"நிலவைப் பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே"

"மாமா, அது வானம்"

"வானம் பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே"

"ப்ச்..முதல்ல நிலவு மாமா. ரெண்டாவது வானம்"

"முதல் நிலவைப் பார்த்து ரெண்டாவது வானம் சொன்னது
என்னை தொடாதே"

"கிழிஞ்சது போ!"

எட்டி நிலவைப் பார்த்தேன். வாய் பொத்தி சிரித்தபடி கூடவே வந்து கொண்டிருந்தது. ஆட்காட்டி விரல் சுண்டு விரலை விரித்து 'சேர்த்தி' என்றது.

" சேர்த்தி" என்றபடியே தூங்கிப் போனேன்.

--தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12