Friday, October 2, 2009

தொடர்பதிவு 4: உங்களைப்போல் ஒருவன்

முன்குறிப்பு:

இது கருவேல நிழலின் 50வது பதிவு.

ய்யா.., அம்மா.., வலையெழுத வந்த கதையை பதிவு செய்திருக்கேன் வாங்க அப்படின்னு கூப்பிட்டா வரமாடீங்கன்னு தெரியும். அதுனாலதான் சூட்டோட சூடா இந்த தலைப்பு! என்னையை கோபிச்சு பிரயோஜனம் இல்லை. கூப்பிட்ட பார்ட்டி நம்ம ரௌத்ரன்தான்! so, கொலைக்கருவி பார்ட்டிய இங்கே கிளிக் பண்ணி திட்டிட்டு வாங்க. வந்தது வந்துட்டீங்க பாஸ்! வாங்க உள்ள போய் பேசலாம்.. ஹி.. ஹி...

இனி வரலாறு:

"ங்க காலத்துல எல்லாம்" என்று யோசிக்கிற, பேசுகிற வயசும் வந்து விட்டதால் என் முந்தைய காலத்தையும், நிகழ்வையும் நினைத்து பார்க்கத்தான் வேண்டியது இருக்கிறது. ஏழெட்டு வயசு இருக்கும் போது இரவு ஏழு மணிக்கெல்லாம் கிராமம் இருட்டு பூத்து கிடக்கும். வீட்டில் சிம்னி விளக்கு புகைந்து கொண்டிருக்கும். தெரு முக்கில் ஒரு மினிட்டாம் பூச்சி மின் கம்பம்! எட்டு மணிக்கு விளக்கை ஊதி அணைத்து விட்டு பெரியவர்கள் குழந்தை செய்ய போய் விடுவார்கள். முன்பே செய்த குழந்தைகளான நாங்கள் குசு குசுவென பேசியபடி தூங்கி போய் விடுவோம்.

வ்வளவு கால மாறுதல்களை இந்த "காலம்", கையில் உள்ள பனை ஓலை கொட்டானில் இருந்து எடுத்து, விதைத்த படியே போய் கொண்டே இருக்கிறது. முன்பு ஒரு கவிதை எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டு, அனுப்பிய கையோடு குறிப்பிட்ட பத்திரிக்கையும் வாங்க தொடங்குவேன். பிரசுரத்திற்காக காத்திருக்கிற காலங்கள், அதன் தீவிரத்தையும் கை இருப்பையும் பொறுத்தே இருக்கும். பிறகு கண்ணி அறுபடும். பிறகு அடுத்த கவிதை.

ரு கவிதை பிரசுரம் பத்து கவிதை எழுத ஆதாரமாக இருக்கும். ஒரு கவிதை பிரசுரமாகி விட்டால் மறு வாரமோ மறு மாதமோ அதன் விமர்சன தேடலில் பதைக்கிற மனசு சொல்லி மாளாது. கையெல்லாம் நடுங்கும்... பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம், அவ்வளவு பிரசுரங்கள், விமர்சனங்கள் தாங்கிக்கொண்டு எப்படி உயிரோடு இருக்கிறார்கள் என நினைக்கிறதும் உண்டு. முக்கியமாய் இந்த சந்தோசத்தை!... ஏழெட்டு கவிதை பிரசுரத்தில் ஒரே ஒரு விமர்சனம் பார்த்திருக்கிறேன். சரி, உங்கள் வழிக்கே வருகிறேன். ஒரு பின்னூட்டத்தை! கணையாழியில். ரவி சுப்ரமணியத்தின், "பா.ராஜாராம் கவிதை நன்று" என்பதாக. பத்து பதினைந்து குழந்தைகள் உள்ள வீட்டில் தகப்பனுக்கு தன் குழந்தைகளின் பெயர் சொல்லி அழைப்பதில் தடுமாற்றம் நிகழ்வது இயற்கையே... இந்த ஒத்த பிள்ளையோடு செத்து போக தெரிந்த என்னை மீட்டெடுத்தது மற்றொரு காலம்.

ன் காலரை விலக்கி விட்டு பிடரியில் போட்டது வேறொரு காலம். வாணி ஒழுகியபடி வாசிக்க, எழுத எல்லாம் மறந்து போனது. அப்புறம் சவுதி வந்தாச்சு. கூட வந்த இரண்டு நண்பர்களும் வேறு நல்ல வேலை கிடைத்து போய் விட்டார்கள். கடைசியாக போன கபிலன் மனதளவில் மிக நெருங்கி இருந்தார். அவரும் போனதில் அறையின் வெறுமை முகத்தில் அறைந்தது. இனி தாங்காது என்றுணர்ந்து அறை மாறினேன். அங்கு கிடைத்தவர்தான் குமார் சேட்டா. அவரிடம் கணினியும் நெட் வசதியும் இருந்தது. தினமலர் தொடங்கி திண்ணை.காம் வரையில் வாசிக்க வாய்த்தது. வாசித்து கொண்டிருந்தேனே ஒழிய எழத தோணலை. ஓசியாக ஒருவரின் கணினியை எவ்வளவு காலம் உபயோகிப்பது? ஒரு சுபயோக சுப தினத்தில், குழந்தைகளின் தேவைகளை சுரண்டி ஒரு லேப்டாப்பும் வாங்கியாச்சு.

சொந்தத்தில் கணினி வந்த பிறகு குடும்பத்தை நண்பர்களை தொடர்பு படுத்திக்கொள்வது எளிதாக மாறியது. தம்பி கண்ணன் (பெரியப்பா மகன்) கனடாவில் இருக்கிறான். (வானியங்குடியான்கள் எங்கெல்லாம் போய் விடுகிரான்கள் பாருங்கள்!. அது மற்றொரு வள்ளி திருமணம் பிறகு பேசுவோம்) அவனிடம் பேசிக்கொண்டிருந்த போது, "டேய்.. நீ கவிதை எல்லாம் எழுதுவீல்ல.. எழுதி அனுப்பு உனக்கு ஒரு ப்ளாக் திறக்கலாம்" என்றான். இந்த பிளாக் என்கிற வார்த்தையை கேள்விப்பட்டு சற்றேறக்குறைய மூணரை மாத காலம்தானாகிறது. "புதுசா எதுவும் எழுதலைடா... பழசை வேண்ணா வகை படுத்துறேன்" என்று மீண்டும் நான் எழுத தொடங்கினேன்.

ங்குதான் ரமேஷ் வருகிறார். ரமேஷ் கண்ணனின் குடும்ப நண்பர். கனாடாவில் பணிபுரிபவர். கண்ணன் என் பெரியப்பா மகன். எனக்கு எதுனா செய்யணும் என்பது நிலத்தடி நீரோட்ட இயற்கையே. இந்த ரமேஷ் எனக்கு யாருன்னே தெரியாது. உதவி செய்கிற மனசும், ஆழத்தில் கிடக்கிற அவரின் இலக்கிய ஆர்வம் காரணமாகலாம் என யோசிக்க வைக்கிறது. அல்லது எனக்கு நட்புன்னா உயிர். அவருக்கும், கண்ணனும் கண்ணனின் உறவுகளும் அப்படியே தோன்றி இருக்கலாம். பெரியம்மா மரபு கவிதைகள் எழுதுவார்கள். அவர்களுக்குத்தான் முதல் ப்ளாக். பிறகு சித்தப்பாவின் அழுத்தத்தின் அதிர்வுகள்! மூன்றாவதாக நம் கருவேல நிழல்!.

ழுதி அனுப்பிய முதல் கவிதையிலேயே என்னை நெருங்கிக்கொண்டார். அப்ப தொடங்கி இப்ப வரையில் கருவேல நிழலின் ஆத்மாவை கையிலெடுத்து கொண்டார். கொண்டார்கள்!

ழுதி அனுப்புவது மட்டுமே என் செயலாக இருக்கிறது. பார்த்து பார்த்து மெருகூட்டுகிறார்கள் இருவரும். போக, உங்களின் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதும், உங்கள் தளம் வந்து பின்னூட்டம் இடுவதும் இவர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன். உங்கள் கைகளை பிடித்துக்கொண்டு பேச இன்ஜினியர்களை அனுமதிக்க எனக்கு சம்மதமாகவில்லை. (இது உங்கள் சுந்தரின் நட்டு! இது போல்ட்டு! பொருத்தி பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்வார்களோ எனும் பயம்தான்!) என்னை முன்னாள் வைத்து இவர்கள் ரசித்து கொண்டிருப்பதாக உணர்கிறேன். இவர்களை முன்னால் வைத்து நான் ரசித்து கொண்டிருப்பதை இவர்கள் அறிவார்களா? ஏனெனில் என் எழுத்தை உயிரோட்டமாய் காட்சி படுத்துவதை பார்க்க அவ்வளவு அழகாய் சந்தோசமாய் இருக்கிறது. ஒரு கவிதை எழுதி, அனுப்பி, காத்திருந்து, பிரசுரமாகி, விமர்சனம் பார்க்கிற சந்தோசம் இதில் உடனுக்குடன் வாய்க்கிறது.

கிட்டத்தட்ட எழுத்து மறந்து போன நிலையில் (முன்பும் பெரிதாக எழுதி கிழித்ததில்லை என்றாலும்) இந்த சந்தோசம் அளவிட முடியாததாய் இருக்கிறது. இந்த மூணரை மாத காலங்கள் எனக்கு ரொம்ப புதுசு மக்கா. சாப்பாடு நெடி அடிக்கிற நிகழ்வில் இருந்து வெளி வருகிறேன்... முகமறியா என் நண்பர்கள், நண்பிகள், உறவுகள், எல்லோருடனும் அமர்கிறேன், பேசுகிறேன். சிரிக்கிறேன், பொழுதை எனதாக்கி கொள்கிறேன், நமதாக்கி கொள்கிறேன்.... இழந்த என் பழைய நட்பைகூட புதுப்பித்து கொள்கிறேன்!

துக்கெல்லாம் இந்த ரமேஷ், கண்ணனுக்கு என்ன செய்ய போகிறேன் என்கிற கேள்வி மட்டும்தான் இப்போதைக்கு புதுசு. அதிலும் கண்ணனுக்கு ஒன்னும் செய்ய வேண்டாம். உங்களுக்கு என்ன செய்ய போகிறேன் ரமேஷ்?

விடுங்கள் ரமேஷ்! எல்லோருமாய் ஒரு நாள் ஒரே குடும்பத்தில் பிறந்திரலாம்....

மிகுந்த அன்பும் நன்றியும் ரௌத்திரன்.

ப்படியே ஜியோவ்ராம் சுந்தர், நேசமித்ரன், ஷென்ஷி இவர்கள் வலையெழுத வந்த கதைகளையும் கேட்டுராலாமுன்னு இருக்கு ....பார்ப்போம்!

அன்புடன்,
பாரா

29 comments:

சந்தனமுல்லை said...

சுவாரசியமாக இருந்தது....ரசித்தேன்!
நிலத்தடி நீரோட்டத்திற்கும், நிலத்தடி நீரோட்டமாக மாறப்போகிறவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்!!

/விடுங்கள் ரமேஷ்! எல்லோருமாய் ஒரு நாள் ஒரே குடும்பத்தில் பிறந்திரலாம்..../

:-)

சென்ஷி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பா.ரா.சார்!

அழைப்பிற்கு மிக்க நன்றி. நிச்சயம் தொடர்கிறேன்.

சந்தான சங்கர் said...

//எல்லோருமாய் ஒரு நாள் ஒரே குடும்பத்தில் பிறந்திரலாம்....//

நிச்சயமாக..

வலையுலகில்

கலையுறவுகளாய்

தொடரட்டும் நம் பந்தங்கள்..

கல்யாணி சுரேஷ் said...

நல்லாருக்குண்ணா.

rvelkannan said...

ஐம்பதுக்கும் வாழ்த்துக்கள்.
ஐம்பதிலும் நெஞ்சை தொடும் வரிகள்.
சிறுவயதிலிருந்து எழுதுவதால் இது
உங்களுக்கு இயல்பாக வருகிறது.
இதற்கு உங்களின் தொடர் வாசிப்பிற்கும்
தெளிந்த சிந்தனையும் காரணம்.
நீங்கள் வலைப்பூ தொடங்குவதற்கு
காரணமாயிருந்த அனைவருக்கும்
எங்களுது மனமார்ந்த நன்றி

இரசிகை said...

5o...5oo...5ooo...en peruki nirainthu vazhiya vaazhthukal..:)

ஷங்கி said...

ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துகள் அன்பரே! உங்கள் கதையும், அதைச் சொல்லிய விதமும், தேர்ந்த்தெடுத்த வார்த்தைகளும் வழக்கம்போல அருமை.

velji said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
எதை எழுதினாலும் மனதிற்கு நெருக்கமாய் இருப்பது உங்கள் சிறப்பு, சார்... இல்லை இல்லை..மக்கா!

துபாய் ராஜா said...

50-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.இதே வேகத்துல சீக்கிரம் செஞ்சுரி அடிங்க.

தமிழ் நாடன் said...

முதலில் ஐம்பதாம் பதிவுக்கான வாழ்த்துக்களை பிடியுங்கள்! உங்கள் கவிதைகளைப்போன்று உங்கள் வலைப்பூவின் வரலாறும் நயமாக இருக்கிறது! இனிதே தொடரட்டும் உங்கள் வலைப்பயணம்.

மண்குதிரை said...

romba nekizhssiya irukkunney

ஆ.ஞானசேகரன் said...

//இது கருவேல நிழலின் 50வது பதிவு.//

வாழ்த்துகள் நண்பா 50து 500 ஆக வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

ஐம்பது நாட் அவுட் - வாழ்த்துக்கள் நண்பா!
***********************************
"எங்க காலத்துல எல்லாம்" என்று யோசிக்கிற, பேசுகிற வயசும் வந்து விட்டதால்

பார்த்தால் தெரியலையே அப்படி. அந்த காயகல்பம் எந்த கடையில கிடைக்குது சொல்லுங்க நண்பா
***********************************
எட்டு மணிக்கு விளக்கை ஊதி அணைத்து விட்டு பெரியவர்கள்
குழந்தை செய்ய போய் விடுவார்கள்.

ஹா ஹா ஹா - குசும்பு
***********************************
விடுங்கள் ரமேஷ்! எல்லோருமாய் ஒரு நாள் ஒரே குடும்பத்தில் பிறந்திரலாம்....

இதுதான்யா பா.ரா. பன்ச் - மொத்த பதிவும் செமையா இருக்கு நண்பா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// முகமறியா என் நண்பர்கள், நண்பிகள், உறவுகள், எல்லோருடனும் அமர்கிறேன், பேசுகிறேன். சிரிக்கிறேன், பொழுதை எனதாக்கி கொள்கிறேன், நமதாக்கி கொள்கிறேன்.... இழந்த என் பழைய நட்பைகூட புதுப்பித்து கொள்கிறேன்!//

அழகாக வார்த்தையில் வடித்திருக்கிறீர்கள் ராஜாராம். 50 ஆவது வதிவுக்கு வாழ்த்துக்கள்.

ஹேமா said...

எனக்கு ஒரு அண்ணாவையும் பெரியப்பாவையும் தேடித்தந்த இணையம் வாழ்க.வாழ்த்துகள் அண்ணா.

ரௌத்ரன் said...

அழகான நினைவலைகள்..50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ராஜா சார்...

பாலா said...

விடுங்கள் ரமேஷ்! எல்லோருமாய் ஒரு நாள் ஒரே குடும்பத்தில் பிறந்திரலாம்....

மாம்ஸ்
இதுதான் உங்க டச்

செ.சரவணக்குமார் said...

அன்புள்ள அண்ணன் பா.ரா..

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

ரியாத்திலிருந்து திரும்பிவிட்டீர்களா?

யாத்ரா said...

அண்ணா, ரொம்ப நெகிர்வான வரலாறு, 50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பா.ரா
ஜெஸ்வந்தி ஏற்கனவே தொடர சொன்ன பதிவுதான் இது நான்தான் காலம் கடத்தி வந்தேன் இப்போது நீங்கள் . சிக்க வச்சுடீகளே மக்கா

குழந்தைகள் செய்யப் போய் விடுவார்கள் அப்புறம் கடைசி பன்ச் இதெல்லாம் கூடவே வருமோ

சத்ரியன் said...

//எட்டு மணிக்கு விளக்கை ஊதி அணைத்து விட்டு பெரியவர்கள் குழந்தை செய்ய போய் விடுவார்கள். முன்பே செய்த குழந்தைகளான நாங்கள் குசு குசுவென பேசியபடி தூங்கி போய் விடுவோம்.//

பா.ராஜாராம்,

முதலில் வாழ்த்துகள் 50 போட்டதுக்கு.

எதையும் விற்றுவிடும் எழுத்துத் திறமை!!!!! கிராமத்தின் இரவுத்தொழிற்சாலை இயங்கியதை எவ்வளவு இயல்பாய், தெவிட்டாமல் தெரிவித்திருக்கிறீர்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ராஜாராம் சார்......

கவிதாசிவகுமார் said...

நானும் 'உங்களில் ஒருவன்தான்' என்று அனைத்து உறவுகளுக்கும் யதார்த்த அன்பைச் சொல்லியும், நட்புக்கு மரியாதை தெரிவித்தும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள். நன்று. வாழ்த்துக்கள்.

SUFFIX said...

50வது இடுகை!! வாழ்த்துக்கள் அண்ணே, நெகிழ்வு, மகிழ்வு, குசும்பு, குறும்பு எல்லாத்தையும் கலக்கலா எங்களுக்கு தரக்கூடிய அருமையான நண்பர். மிக்க மகிழ்ச்சி!!

நர்சிம் said...

50க்கு வணக்கங்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அரை சதத்திற்கு வாழ்த்துக்கள்.

வழக்கம் போல சுவாரஸ்யம் குன்றாதது இந்த தொடர்பதிவும்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,
ரமேஷ்,
கண்ணா,
முல்லை,
சென்ஷி,
சங்கர்,
கல்யாணி,
வேல்கண்ணா,
ரசிகை,
ஷங்கி,
வேல்ஜி,
துபாய் ராஜா,
தமிழ் நாடன்,
மண்குதிரை,
சேகர்,
நவாஸ்,
ஜெஸ்,
ஹேமா,
ரவுத்திரன்,
பாலா,
சரவணா,
யாத்ரா,
நேசா,
சத்ரியன்,
வசந்த்,
உதிரா,
சபிக்ஸ்,
நர்சிம்,
அமித்தம்மா,

மிகுந்த அன்பும்,சந்தோஷமும்,நன்றியும்,நண்பர்களே..

thamizhparavai said...

ராஜாராம் சார்...
50க்கு வாழ்த்துக்கள்..
அசத்தலான பதிவு...இந்தத் தொடரில் நான் படித்ததில் சிறந்தது இதுவும், யாத்ராவினுடையதும்...
படிக்கப் படிக்க சுகமான உரைநடை ஆங்காங்கே எள்ளலுடன்...
உங்கள் அனுபவங்களை உரைநடையிலும் பார்க்க ஆசை...
இந்த ப்ளாக்கோ அல்லது புது பிளாக்கிலோ தொடரவும் உங்களுக்கும் விருப்பமிருந்தால்.
வசீகரிக்கிறது வார்த்தைகள்...

Nathanjagk said...

அன்பு ராஜா!!
50க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ​மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!
உங்கய் வலைஎழுத்து பற்றிய விரைணையை மிக ரசித்தேன்! எப்போதும் போல் பாசநிழல் கவிந்த எழுத்து, நடை!