Tuesday, August 3, 2010

புரை ஏறும் மனிதர்கள் - ஒன்பது

சார் என்ற அண்ணன் ராஜசுந்தரராஜன்

காளீஸ்வரன் வாத்தியாரை பார்க்கிற போதெல்லாம், பயல்கள் ஆன நாங்கள், தொப் தொப் என சைக்கிளில் இருந்து குதிப்போம். வணக்கம் வைப்போம். "விழுந்து வச்சுராதடா முண்ட" என்பார் சாரும்.

வாத்தியார் வாயில் இருந்து புறப்படுகிற இந்த முண்ட எவ்வளவு வசீகரமாக இருக்கும் தெரியுமா?

ஏனெனில், சார் வாத்தியாராக இருந்ததில்லை. சிவகங்கையாக இருந்தார். ப்ரியங்களில் நிறைந்த என் சிவகங்கையாக.

சிவகங்கை மக்களின் பிரதானமான வார்த்தை இந்த முண்ட. அம்மா அப்பா தொட்டு அனேகமாக அனைவர் வாயிலும் நிறைந்து தவழும் வார்த்தை. அன்பானாலும், கோபமானாலும், குஷியானாலும்.

"வாத்தியார்னா, வாத்தியார் மாதிரியா இருக்கணும்?" என்றிருப்பவர் காளீஸ்வரன் சார்.

நடந்து போய்க் கொண்டிருப்போம். சாரை பார்த்துருவோம். அனிச்சையாக சட்டையின் மேல் பட்டனை மூட்டும் கைகள். வணக்கம் வைக்கிற சந்தோசத்தில் மறந்தும் போயிருவோம்.

"அப்பா நல்லாருக்காராடா ராஜாராமா?" என்று நம்மிடம் பேசிக் கொண்டே நம் சட்டையின் மேல் பட்டனை பொருத்திக் கொண்டிருப்பார் காளீஸ்வரன் சார்.

திருமணமாகி, tvs-50 -யில் மகாவை முன்னிருக்கையில் அமர்த்தி, லதாவை பின்னிருக்கையில் அமர்த்தி, போய்க் கொண்டிருந்த காலத்திலும் கூட,

சாரை பார்த்ததும், "சார்" என்று சடன் பிரேக் போட்டு நின்று பேசிய நாளில், "என்னடா, வண்டிலாம் வாங்கிட்ட போல, கெட்ட பயமா இவன், பத்திரமா பார்த்துக்க" என்று லதாவிடம் பேசிக் கொண்டே, என் மேல் சட்டை பட்டனையும் மாட்டிக் கொண்டிருந்தார். மகா, திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுக்குன்னே தெரியாமல், எல்லாமே இருப்பது போல், ஏதாவது இருந்து கொண்டிருக்கும், யாரிடமாவது. இல்லையா?

அப்படி,

முன்பே, மனசில் எவ்வளவோ இருந்த ஒருவரை, நர்சிம் தளத்தில் கண்டேன். எல்லோரும் கவிஞர் ராஜசுந்தரராஜன் என்றாலும் அண்ணே என்பதில் நிறைகிறேன். முண்ட மட்டும் தெரிஞ்சவனுக்கு அவ்வளவுதான் தெரியும்.

சுந்தரிடம் விசாரித்து, சிவராமனிடம் அழை எண் பெற்று, சுந்தர் அனுப்பி, அழைத்த போது அண்ணன் திரை அரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

" அதெல்லாம் இல்ல தம்பி உங்களை விடவா படம் பெரிசு எனக்கு?" என்ற குரல்,

நீண்டு
நீண்டு நீண்டு
நீநீநீண்டு
என் சட்டையின்
மேல் பட்டனை மாட்டியது.

பிறகு அண்ணனின் பின்னூட்டம் எங்கு பார்த்தாலும் சைக்கிளில் இருந்து தொப்பென குதிக்கிறேன். வணக்கம் வைக்கிறேன்.

மனைவி குழந்தையுடன் போய்க் கொண்டிருந்த நாள் ஒன்றில் பார்க்க கிடைத்த ப்ரிய வாத்தியார் மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்தது நேசன் தளத்தில்.

பதிவர் தமிழ்நதி, ராஜசுந்தரராஜனும், ராஜாராமும் ஒருவர்தானா? என்கிற கேள்வியை வைத்தார்கள் "பின்னூட்டத்தில்" அதற்கு அண்ணனின் பதில் என்ன தெரியுமா?

"பா.ராஜாராம், ராஜசுந்தரராஜன் ஒருவர் அல்லர். அண்ணன் தம்பிகள். பா.ரா. சிவகங்கையில் பிறந்தார். அல்லது பிழைத்தார். அல்லது இரண்டும். ராஜசுந்தரராஜன் சிவகங்கை மன்னர் கல்லூரியில் puc படித்தார். அவ்வளவு நெருக்கம்"

கேட்கவா வேணும்?...புர்ர்ர்ர் என்று பின்னூட்டத்தில் சந்தோசமாய் நெட்டி முறித்தேன்.

"முண்ட, முண்ட.. பட்டன போடு" என்றது அண்ணனின் பதில் குரல். சாரி, சாரி,..அண்ணன் சாரின் குரல். அது இது.

அன்புத் தம்பி,

யார் யாரோ விளையாட்டு வீரர்கள் பேரெல்லாம் சொல்லி அவங்க செட்டான்னு கேட்டிருக்கீங்க. நான் என்னத்தை விளையாட்டைக் கண்டேன். ஒரு பொண்ணெத் தினம்தினம் பஸ்ஸ்டாண்டு வரை கொண்டுபோயி மேலூர் பஸ்ல ஏத்தி அனுப்ச்சிட்டு வருவேன். ஒருதலை. அவ மேலூர்ல இருந்து வந்துபோய்க்கிட்டு இருந்தா. வகுப்புத் தோழிதான். அவ பிறகு டாக்டருக்குப் படிக்கப் போயிட்டான்னு கேள்வி. நான் ஃபெயிலாயிட்டேன். பாஸாகி இருந்தா நானும் டாக்டர் ஆகி இருப்பேன். லாங்வேஜ் ரெண்டுலயும் கூட A+. மற்ற பாடங்கள்ல எல்லாம் D, D+ தான். கெமிஸ்ட்ரில மாத்ரம் F.

விஸ்வநாதன்னு ஒரு கெமிஸ்ட்ரி லெக்சரர் இருந்தாரு. நல்லாத்தான் நடத்துவாரு, ஆனா அடிக்கடி ஜோக்கு அடிப்பாரு. நான் சிரிச்சுக்கிட்டே மிதந்திட்டேன்.

அண்ணன் ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ். படிச்சிக்கிட்டு இருந்தாரு. பள்ளிக்கூடத்துல அவரு கூடப் படிச்சவரு, 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி' ஆஃபீஸ்ல க்ளார்க்கா இருந்தாரு. இவரு அவர்ட்டச் சொல்லி அவரு கையில இருந்த ஒரு அப்ளிகேஷனை அனுப்பி வச்சாரு. அப்படித்தான் கெமிக்கல் டெக்னாலஜியில டிப்ளமாப் படிச்சேன். ஸ்பிக்ல வேலை கிடைச்சது. அங்கெ போனதுக்கு அப்புறமா எஞ்ஜினியர் ஆனேன். கெமிஸ்ட்ரியில ஃபெயிலாப் போனவன் கெமிக்கல் எஞ்ஜினியர் ஆன கதை இது.

சரி, நம்ம காலேஜுக்கு வருவோம். நான் PUC படிச்ச வருஷம் கண்ணப்பன் (பின்னர் சுகன்யா புகழ்) BA இரண்டாம் ஆண்டோ மூன்றாம் ஆண்டோ படிச்சிக்கிட்டிருந்தாரு. அந்த வருஷம் அவரு காலேஜ் எலெக்ஷன்ல செக்கரட்ரிக்கு நின்னு தோத்துப் போனாரு. அவரும் பிறகு என்னெ மாதிரியே தோத்த பாடத்துல ஜெயிச்சு மந்திரி வரைக்கும் ஆனார்ங்கிறதுனால அவரெ மறக்காம இருக்கேன்.

அந்த வருஷக் கடைசியில கவிஞர் மீரா என்னெக் கூப்பிட்டு விட்டிருந்தாரு. அவர் அப்பப் ப்ரின்ஸ்பல் ஆகலை. தமிழ்த்துறைத் தலைவரா இருந்தாரு. நமக்குத்தான் அவரு வகுப்பு எடுக்குறதில்லையே என்னத்துக்குக் கூப்பிட்டு விட்டிருக்காருன்னு குழம்பிப் போயி, மாடியில இருந்த அவர் அறைக்குப் போனேன். நல்லா ஞாபகம் இருக்கு. அது வசந்தகாலம். அவர் அறைச் சன்னலுக்கு வெளியே இருந்த வேப்ப மரம் கொழுந்துவிட்டு, இந்தா தொட்டுத் தடவுன்னு சன்னலுக்குள்ள எட்டிப் பார்த்திச்சு. என்னெ உட்காரச் சொன்ன மீரா, 'தாமரை' பத்திரிக்கை நடுபக்கத்தைப் பிரிச்சு, "இது என் முதல் வசன கவிதை. எப்படி வந்திருக்கு?"ன்னு கேட்டார். 'நான் ஒரு மலைப்பாதை போகிறேன். கல் கிடக்கிறது. முள் கிடக்கிறது. இடறினாலும் தைத்தாலும் பொருட்டில்லை. நான் மலைப்பாதை போகிறேன்.' இப்படி இதுமாதிரியே அடுக்கடுக்கா இடைஞ்சலும் அதைப் பொருட்படுதாமையுமா அந்தக் கவிதை இருந்திச்சு. நானும் அதையே, "இடைஞ்சல்களைப் பொருட்படுத்தாமை ஒரு கொள்கை வீரனுக்கு அவசியம்ங்கிறது கவிதையில சிறப்பா வந்திருக்கு"ன்னேன். "நம்ம கல்லூரி மலருக்கு நீங்க ஏன் ஒரு கவிதை எழுதித் தரக் கூடாது?"ன்னார். "அய்யோ, எனக்குக் கவிதை எழுதத் தெரியாதே"ன்னேன். அவரு ஒரு பேப்பரெ என் முன்னால் எடுத்துப் போட்டார். அது கண்ணப்பனை ஜெயிச்சு செக்கரெட்டரி ஆன முத்துக்கிருஷ்ணனுக்கு நான் எழுதிகொடுத்த கவிதை: 'விருந்தினரும் வறியவரும் தாமே யுண்ண மேன்மேலும் முகம்மலரும் மேலோர் போல...'ங்கிற கலிங்கத்துப் பரணிப் பாட்டுல தொடங்கி, அதே தாழிசை இலக்கணத்துல, ‘என் முன்னோர்கள் அப்படி இருந்தாங்க; எனக்கும் அப்படி இருக்கத்தான் ஆசை. ஆனா பாரு கஞ்சிக்கு வழி இல்லாமச் செத்துக்கிட்டு இருக்கேன். நீயோ யாழ்மீட்டி வர்ற இரவலன் போல பாடிக்கிட்டு வர்றே, என்கிட்ட உனக்குக் கொடுக்க ஒருசொட்டு ரத்தம் கூட இல்லையே, என்ன செய்வேன், கொசுவே,’ன்னு முடிச்சிருப்பேன். “இது நான் எழுதுனது இல்லை, ஸார்”ன்னேன். ஒரு கட்டுரை நோட்டை எடுத்துப் போட்டு வாசிக்கச் சொன்னார். அதுல எக்கச்சக்க எழுத்துப் பிழை. போதாததுக்கு ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் போட்டுக் குழப்பி இருந்தார். அது முத்துக்கிருஷ்ணன் கட்டுரை நோட்டு. “இவரா இந்தக் கவிதையை எழுதியிருக்க முடியும்?”ன்னார் மீரா. நான் சங்கடப்பட்டேன். “நீங்கதான் எழுதிக் கொடுத்தீங்கன்னு அவரே ஒத்துக்கிட்டார். இதை அவரு பேர்லயே போடுவோம். உங்க பேர்ல ஒரு கவிதை எழுதிக் கொடுங்க”ன்னார். அப்பொ நான் ஒரு கம்யூனிஸ்ட்டு. ‘அது எந்நாளோ இது எந்நாளோ’ன்னு அந்நாள்ல ஒன்னை எழுதிக் கொடுத்தேன். மீரா அதை நல்லாவே இல்லைன்னுட்டார். ஆனாலும் என் படத்தையும் போட்டு அந்தக் கவிதையையும் மலர்ல வெளியிட்டார்.

பதினாலு வருஷத்துக்கு அப்புறம் மீராவும் அவரு மனைவியும் தூத்துக்குடி ஸ்பிக்நகர்ல நானிருந்த வீட்டுக்கு வந்திருந்தாங்க. அன்னிக்கு என் மனைவி சுட்டுக் கொடுத்த வடையோட பக்குவத்தெப் பத்தி வருஷங்களுக்கு அப்புறமும் (கதிரோட கல்யாணத்துலன்னு நினைக்கிறேன்) அந்த அம்மா மறக்காமப் பாராட்டுனாங்க.

மீராவும் போயிட்டாரு. என் மனைவியும் என்னெ விட்டுப் போயி அப்புறமும் தினம்தினம் பார்த்துக்கிறோம் பேசிக்கிறோம். கமுதிக்குப் பக்கத்துல செங்கோட்டைப்பட்டிங்கிறது நான் பொறந்த ஊரு. ஊருக்குப் போறப்போ சிவகங்கை வழியாப் போனா, ‘மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரி’யெக் கையெடுத்துக் கும்பிடாமக் கடக்கிறது இல்ல, இப்பவும்.

அன்போடு
ராஜசுந்தரராஜன்

***

மழெ இல்லே தண்ணி இல்லே
ஒரு திக்கிலே இருந்துங்
கடுதாசி வரத்து இல்லே
அடைக்கலாங்குருவிக்குக்
கூடுகட்ட
என் வீடு சரிப்படலே
நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்

-- ராஜசுந்தரராஜன்


புரை ஏறும் மனிதர்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8

42 comments:

Unknown said...

அன்பு ராஜா ரெம்ப நல்லா இருக்கு

vasu balaji said...

நிச்சயம் புரை ஏறும். இப்படி எழுத்தோட ஒரு காலை தொடக்கம் ரம்மியம். நன்றி பா.ரா.

rvelkannan said...

திரு. ராஜசுந்தரராஜன் - அவர்களின் 'முகவீதி ' படித்துள்ளேன். மேலும் இவரை பற்றிய தகவல் எதுவும் அறியவில்லை. அவ்வப்போது பின்னூட்டம் இடுவார். அண்ணனை பற்றிய இவ்வளவு தகவல் அவரிடம் ஒரு நெருக்கத்தை கொடுக்கிறது. நன்றி அண்ணன் பா.ரா -விற்கு

dheva said...

சித்தப்பா.....

நீங்க சிவகங்கையா????? எங்க இருக்கீங்க சித்தப்பா சிவகங்கை???? ஒரே ஊர்க்காரங்களா போய்ட்டமே....!

வினோ said...

நெகிழ்ச்சி... நல்ல தொடக்கம் இந்த நாளுக்கு.. நன்றி பா ரா அண்ணே..

Unknown said...

அடைகலான்குருவி
கூடு கட்டக் கூட..
சரிப்படாத வீடு ...

அடடா என்ன ஒரு கவிதை

சிநேகிதன் அக்பர் said...

இனிமே நீங்க காலையிலதான் பதிவு போடனும் :)

மன நெகிழ்ச்சியோட தொடங்கும் நாட்கள் இனிமையாகவே நகர்கின்றன.

Vidhya Chandrasekaran said...

மனதில் இருந்து வெளிப்பட்டுள்ள அழகான பதிவு..

vasan said...

ராஜ‌சுந்த‌ர‌ராஜ‌னின்,
சொங்கோட்டைப்ப‌ட்டி,அருகாமை ச‌ங்க‌ர‌ன்ப‌ட்டி,கீழ‌வ‌ல‌சை,சாமிப‌ட்டி,
சேர்ந்த‌கோட்டை,மேட்டுப்ப‌ட்டி புள்ளைங்க‌ள்ளாம்,
பேரையூர் ஹைஸ்கூலுக்குத்
தான் ப‌டிக்க‌வ‌ருவாங்க‌.
நீங்க‌ RDMC ல்ல‌ puc எந்த‌ பேட்ச்?

க ரா said...

நல்ல பகிர்வு மாம்ஸ்.. நன்றி.

யாத்ரா said...

அண்ணே அண்ணனின் கடிதத்தைப் பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றிணே

செல்ல நாய்க்குட்டி மனசு said...

லாங்வேஜ் ரெண்டுலயும் கூட A+. மற்ற பாடங்கள்ல எல்லாம் D, D+ தான். கெமிஸ்ட்ரில மாத்ரம் F.//

புது grade F நல்ல நகைச்சுவை.
ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் எழுத்துக்கள்.

இரசிகை said...

oru raja........
innoru raja vai patri
mozhinthathu arumai...!!

raju iya vin kadithaththil yeththunai yelimai..!!
iyavirkku en anbum vanakkangalum.

chattai poththaan..
thopak thokkena kuthithuk vaiththa vanakkangal..
athai thodarbu paduththiya vitham....remba pidichchirunthathu...rajaram sir:)

//எதுக்குன்னே தெரியாமல், எல்லாமே இருப்பது போல், ஏதாவது இருந்து கொண்டிருக்கும், யாரிடமாவது. இல்லையா?//

unami...
nijam....
saththiyam....:)

//முண்ட//

intha vaarththaiyai iththanai thadavai payanpaduththiyirukkanumaa?....
appadinnu kekkaamal poka mudiyala.
thappa ninachchukkaatheenga.

nantriyum anbum......

ஹேமா said...

அண்ணா ... உங்களைப் பிடிக்கலன்னு சொல்றது யாரு !

'பரிவை' சே.குமார் said...

அன்பின் பா.ரா. அண்ணனுக்கு...

வணக்கம்.

உங்கள் பதிவை காலையில் அலுவலகத்தில் இருக்கும்போது பார்த்தேன். அப்போதே பின்னூட்டமிட முடியாத சூழல் (தமிழ் எழுத்துரு இல்லை).
நீங்கள் சிவகெங்கை மாவட்டமா இல்லை சிவகெங்கை தானா?.

கவிஞர் மீரா ஐயா அவர்களுடனான ராஜசுந்தரராஜன் அண்ணாவின் நட்பு குறித்து படித்து வியந்தேன்.

நான் தேவகோட்டை கல்லூரியில் படித்த காலத்தில் எங்கள் பேராசான். முனைவர் மு. பழனி இராகுலதாசன் ஐயாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால் (இன்றுவரை அப்பா - பிள்ளை உறவாய் தொடர்கிறது) பல நல்ல இலக்கியவாதிகளுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அது ஒரு சிலருடன் இன்றுவரை நீடிக்கிறது.

தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்ற தேவகோட்டை கிளையில் இருந்த போது கவிஞர் மீரா, திரு.பொன்னீலன், குன்றக்குடி அடிகளார் (பெரியவர்) மற்றும் திரு.பொன்னம்பல அடிகளார் போன்றோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் மீராவை ஐயாவுடன் சந்தித்து இருக்கிறேன். ஐயா வரை அண்ணன் என்றுதான் அழைப்பார். அவரது அச்சகம் அகரம் என்று நினைக்கிறேன். அங்கும் வந்ததாய் ஞாபகம்.

உங்கள் புரை ஏறும் மனிதர்கள் வரிசையில் அண்ணாவின் பின்னூட்டத்துடனான பகிர்வு மிகவும் அருமை.

ஆமாண்ணே... நம்ம பக்கம் இந்த வார்த்தை (முண்ட) மிகவும் பிரபலம்தான்.

நல்லாயிருந்துச்சுண்ணே உங்கள் பகிர்வு.

பகிர்வுக்கு நன்றி.

rajasundararajan said...

மனிதன், கூடிவாழ்தலை விழையும் ஒரு விலங்கு. அது காரணமோ என்னவோ, வலைத்தள எழுத்தாளர்களுக்குப் பின்னூட்டம் இடத் தொடங்கினேனால். பொதுவாக, படைப்பு எழுத்துகளை ஊக்குவிக்கும் முகமாகத்தான் அதைச் செய்கிறேன். அல்லாமல் மனிதர்களைக் கவர்தல் அச்சத்திற்கு உரியது. ‘வியன்ஞாலவெளியினும் பெரியவன்/ளாக்கும் நான்!’ என்னும் மனிதர்கள் இடைப்பட்டுச் சப்பிச் சலிந்து, கிலி பிடித்தவன் அளியேன்.

“சந்திக்கணுமே, முடியுமா ஸார்?” என்றார் நர்சிம் ஒருநாள். “என் எழுத்து வழியாக என்னைப் பற்றியதொரு கற்பிதம் உங்களுக்கு இருக்கிறது. அப்படியே abstract-ஆக இருந்துவிட்டுப் போகிறேனே,” என்றேன். அப்படியும் என் மூஞ்சியை அவர் பார்க்க நேர்ந்துவிட்டது. ஜ்யோவ்ராம்சுந்தருக்கு என்னை சிவராமன் காட்டிக் கொடுத்துவிட்டார். சிவராமனே காரணம், அவர் திரையிட்ட படம்பார்க்கப் போய் ஒரு பத்துப் பன்னிரண்டு பதிவர்களுக்கு அறிமுகமாகிவிட்டேன். ‘எதுவுமே நாம் நினைப்பதுபோல் நடப்பதே இல்லை’ இது விதி (மர்ஃபி விதிகளில் ஒன்றா?).

இன்று, கவிஞர் பா.ரா. என்னை இப்படி வெளிச்சப்படுத்திப்போட்டார். இப் பதிவுக்கான பின்னூட்டங்கள் படித்து வருகையில் கண் ததும்புகிறது, ஒரு விலங்குதானே நானும்? தனித்தனியாகக் கூடுமாறு தெளியாமல், மொத்தமாய் எல்லாரையும் வணங்குகிறேன். நன்றி! ஒரு பின்னூட்டத்தில் ஒரு பதிவர் (இப்போதும் எழுதுகிறாரா, ஐயம்) என் பட்டிக்குச் சுத்துபத்துப் பட்டியெல்லாம் சொல்லி, RDMC-இல் நான் PUC எந்த batch என்று வினவியிருக்கிறார். 1969-70 batch.

rajasundararajan said...

‘முண்டை’ என்பது சமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தியதொரு சொல். (‘Only’ எனும் பொருட் சமற்கிருதத்துக் ‘கேவலம்’, இற்றைத் தமிழ் வழக்கில் இழிபொருள் தருவது போல, ‘முண்டை’யும் இழிந்துவிட்டது.) மொட்டைத் தலையளை (கைம்பெண்ணை) முண்டை என்றதும், அம்மண மேனியை ‘முண்டக் கட்டை’ என்பதும் சமணர் தோற்றப்பொருள் ஒட்டி வந்ததே.

காளீஸ்வரன் வாத்தியார் ‘முண்டை’ என்று சொல்லிக்கொண்டே பொத்தானை மாட்டிவிடுதல், இப்போது, என்ன பொருள் தருகிறது பாருங்கள் - அப்படிப் போயித் தொலைஞ்சிறாதீங்கடா!

// “கெட்ட பயமா இவன், பத்திரமாப் பார்த்துக்க” என்று லதாவிடம் பேசிக்கொண்டே, என் மேல் சட்டை பட்டனையும் மாட்டிக் கொண்டிருந்தார். மகா, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.// ஆகா, என்ன ஒரு அற்புதமான காட்சி!

காளீஸ்வரன் வாத்தியார்தான் வாத்தியார். என்னை ஒப்பிட்டிருக்கக் கூடாது. தகுதியற்றவன் நான். பிறகும் அன்னாரை அறியத் தந்ததற்கு நன்றி. அன்னார் கால்களைத் தொட்டு வணங்குகிறேன்.

பதிவுலகம் ஒரு பயிற்சிப் பள்ளி. நல்லதைப் பாராட்டுங்கள். பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தமிழின் வாழ்வை நீட்டிக்கும் ஓர் அரும்பணியில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று பொறுப்புணர்ந்து பெருமைப்படுங்கள். நிலவெளி வயல்களுக்கு வரப்பு உண்டு; கடலில் இல்லை. நேற்று நான் பிடித்த இடத்தில் இன்று நீங்கள் மீன்பிடிக்கலாம். சிங்களப்படை போல ‘நாளை’ அச்சம் வந்து துப்பாக்கி எடுக்க வேண்டாம். இது என் வேண்டுகோள்.

பா.ராஜாராம் said...

//இன்று, கவிஞர் பா.ரா. என்னை இப்படி வெளிச்சப்படுத்திப்போட்டார்//

மனசுள் இருக்கும் சக்ரவர்த்திகளில் ஒருவரான உங்களை, அண்ணே என்பதில் நிறைகிறேன். எதுக்குன்னே கவிஞர் எல்லாம்? உங்க புள்ளை இல்லியா? உங்க தம்பி இல்லையா?

போங்கண்ணே..

நேசமித்ரன் said...

அப்பாடா வந்தாச்சா அண்ணன் !

தமிழை நீட்டுவித்தல்.... ஆம் அண்ணே அப்படியே பிரியத்தையும்

மிக நெகிழ்வாய் இருந்தது அண்ணே உங்களின் இந்தக் கடிதமும் பா.ரா வின்
அவருக்கேயான பிணைப்புறவின் வழி கதை சொல்லும் மொழியும்

இருப்பு என்பது தனியல்லவே வேண்டியிருக்கிறது ஆகாசம், காற்று
இறையச்சம் அல்லது மரணம்,
முயங்கியவளிடம் தாய் பார்க்கும் ஒரு தருணம்

எழுத்துக்கு இந்தா நீங்கள்...

பா.ராஜாராம் said...

காளியப்பண்ணே, 'முண்ட, முண்டன்னு' மொத ஆளா வந்தாச்சா? நன்றியண்ணே!

ரொம்ப நன்றி பாலாண்ணா!

வேல்கண்ணா, ரொம்ப நாள் ஆச்சு மக்கா. நலமா? நன்றி!

தேவா, சிவகங்கையேதான். கீழவாணியங்குடி. நீங்கள் குறுக்கத்தி என்றும் அறிந்திருக்கிறேன், மகன்ஸ்! நன்றி! :-)

நன்றி வினோ!

நன்றி செந்தில்!

பதிவு போடுறதெல்லாம் நம்ம கையில் இல்லையே பங்காளி. தெரிஞ்சுமா? நன்றி அக்பர்! :-)

நன்றி வித்யா!

வாசன்ஜி, அண்ணன் பதில் சொல்லியிருக்கார். நன்றி!

நன்றி ஆர்.கே. மாப்ஸ்! (ஸ்வேதாவை கேட்டேன்னு சொல்லுங்க) :-)

சரி, செந்தி! நன்றியும்!

நன்றி நாய்க்குட்டி மனசு!

மணிநரேன் said...

அழகான பகிர்வு.

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Ravichandran Somu said...

பா.ரா அண்ணே,

நெகிழ்ச்சியான பகிர்வு....

ராஜசுந்தரராஜன் சார் பின்னூட்டங்களின் மூலம் அவரின் உயரத்தை அழகாக தெரியப்படுத்தியுள்ளார். அருமை. ராஜசுந்தரராஜன் சாரின் எழுத்துகளை படித்ததில்லை. தேடி படிக்கிறேன்...

//தொப் தொப் என சைக்கிளில் இருந்து குதிப்போம். //

நாங்களும் இப்படித்தான் குதிப்போம்:)

//சாரை பார்த்ததும், "சார்" என்று சடன் பிரேக் போட்டு நின்று பேசிய நாளில், "என்னடா, வண்டிலாம் வாங்கிட்ட போல, கெட்ட பயமா இவன், பத்திரமா பார்த்துக்க" என்று லதாவிடம் பேசிக் கொண்டே, என் மேல் சட்டை பட்டனையும் மாட்டிக் கொண்டிருந்தார். மகா, திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்//

அடடா...அற்புதமான காட்சி. இவரல்லவோ குரு!

//நீண்டு
நீண்டு நீண்டு
நீநீநீண்டு
என் சட்டையின்
மேல் பட்டனை மாட்டியது//

அற்புதமான விவரிப்பு... Excellent!

// நான் என்னத்தை விளையாட்டைக் கண்டேன். ஒரு பொண்ணெத் தினம்தினம் பஸ்ஸ்டாண்டு வரை கொண்டுபோயி மேலூர் பஸ்ல ஏத்தி அனுப்ச்சிட்டு வருவேன். //

கலக்கல்... பஸ் ஏத்திவிடறது காலங்காலமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது:)

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

rajasundararajan said...

//அண்ணே என்பதில் நிறைகிறேன். எதுக்குன்னே கவிஞர் எல்லாம்? உங்க புள்ளை இல்லியா? உங்க தம்பி இல்லையா?//

'தம்பி பா.ரா.' என்றுதான் முதலில் எழுதியிருந்தேன், தம்பி. ஆனால் மறுவாசிப்பில் அது இடற, மாற்றிவிட்டேன். அம்மா ஆசிரியை என்றால், வகுப்பறையில் "அம்மா!" என்று விளிக்க முடியாதது போலா, அல்லது என் பின்னூட்டத்தில் அடியிழைந்துள்ள விலகல் தொனியால் அப்படியா, 'இதனால்' என்று துலக்கத் தெரியவில்லை. வேண்டுமென்று செய்ததில்லை.

இரசிகை said...

//

rajasundararajan said...
‘முண்டை’ என்பது சமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தியதொரு சொல். (‘Only’ எனும் பொருட் சமற்கிருதத்துக் ‘கேவலம்’, இற்றைத் தமிழ் வழக்கில் இழிபொருள் தருவது போல, ‘முண்டை’யும் இழிந்துவிட்டது.) மொட்டைத் தலையளை (கைம்பெண்ணை) முண்டை என்றதும், அம்மண மேனியை ‘முண்டக் கட்டை’ என்பதும் சமணர் தோற்றப்பொருள் ஒட்டி வந்ததே.

//

ithu ippadiththaan yenbathai therivithatharkku nantri iya...

irunthaalum..,
thappu yenbathaakave unarthum soozhnilaiyileye valarnthathaal...
appadi kettuvitten.

thappunna mannichchudunga rajaram sir...

vasan said...

அன்பு பா.ரா,
நானும் 69/70 2nd Group A section.
(அப்ப‌ல்லாம் டாக்ட‌ர் ம‌ட்டுந்தான் பெரிய‌ ப‌டிப்பு)
மார‌ந்தை (க‌ட‌லாடி ப‌க்க‌ம்) ந‌ட‌ராஜ‌ன், சேர்ம‌னுக்கு நின்னு....,
1969 ல் அப்போலா 11 ச‌ந்திர‌னில் இற‌ங்கி, வின்க‌ல‌த்தின் க‌த‌வு
திற‌க்க‌முடியாம‌ல் ஆம்ஸ்ட்ராங்,'க‌த‌வை'த‌ட்டிக் கொண்டிருப்ப‌தாய்
அகில இந்திய‌ வானொலி நேர‌டி ஒலிப‌ர‌ப்புகிற‌து.
(கேண்டின் மேல‌ ஸ்பீக்க‌ர் கட்டியிருப்பாங்க‌, க‌ட‌லை வ‌டை சூப்ப‌ரா இருக்கும்)
அதே நேர‌ம், ஹாஸ்ட‌ல்ல‌ சாதி த‌க‌ராறு, ஒரு பிரிவின‌ர் இருக்கும் அறையின்
தாழிட்ட‌ 'க‌த‌வுக‌ள்' உருட்டு க‌ட்டைக‌ளால் த‌ட்ட‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்த‌து
ஒரு ச‌ரித்திர‌ நினைவு என‌க்கு இன்றும், என்றும்.
ந‌ன்றி, திரு. ராஜசுந்தரராஜன், ப‌ழைய‌ நின‌வுக‌ள் வெளிச்ச‌மிட்டால்,
கால‌டிச் சுவ‌டு தாண்டியும், ச‌ம்ப‌வ‌மோ, முக‌மோ ச‌ந்தித்த‌ சாத்திய‌மோ
நிழ‌லாட‌லாம், நின‌வுக‌ளை கிள‌றி பார்க்க‌லாம்.

ரிஷபன் said...

ஏனெனில், சார் வாத்தியாராக இருந்ததில்லை. சிவகங்கையாக இருந்தார். ப்ரியங்களில் நிறைந்த என் சிவகங்கையாக.
இந்த எழுத்தும் குழைவும் நெகிழ்ச்சியும் .. சொல்லத் தெரியவில்லை அய்யா.. அப்படி ஒரு உல்லாசம்.. நிறைவு.. வாசிக்கும்போது..

அன்பரசன் said...

உங்க பாசத்தை பக்காவா பகிர்ந்து இருக்கீங்க..
Nice

Radhakrishnan said...

எதற்கு உங்கள் புரை ஏறும் மனிதர்கள் பதிவுகள் படிக்கும்போது எனது கண்கள் கலங்குகிறது.

ரம்மியமான மனிதர்களை கேள்விப்படும்போதேல்லாம் உலகம் இப்படிபட்ட்ட மனிதர்களால் மட்டுமே நிறைந்து இருக்க கூடாதா எனும் பேராசை வந்துவிடுகிறது.

நர்சிம் said...

மிக நெகிழ்வு. பகிர்ந்தமைக்கு நன்றி பாரா சார்.

பா.ராஜாராம் said...

நன்றி ரசிகை! அதிகமாத்தான் ஆயிருச்சோ பாசு? nativitty தாகம் போல..:-) இதென்ன ரசிகை 'தப்பா நினைச்சுக்காதீங்க' கேள்வியெல்லாம்? தோன்றத பேசணும். அதுதானே நட்பு.

நீதான். நன்றிடா ஹேமா!

குமார், கீழவாணியங்குடி. (மானாமதுரை வழி) அருமையான பகிர்வு, பின்னூட்டத்தில். பின்னொரு நாள் பேசலாம் குமார், எல்லாம். நன்றி!

நன்றியண்ணே!

//பதிவுலகம் ஒரு பயிற்சிப் பள்ளி. நல்லதைப் பாராட்டுங்கள். பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தமிழின் வாழ்வை நீட்டிக்கும் ஓர் அரும்பணியில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று பொறுப்புணர்ந்து பெருமைப்படுங்கள். நிலவெளி வயல்களுக்கு வரப்பு உண்டு; கடலில் இல்லை.//

ஆம் அண்ணே. முயல்கிறோம்.

நன்றி நேசா!

நன்றி மணிநரேன்!

நன்றி ஸ்வேதா! மாப்ள ஆர். கே. ட்ட சொல்லிர்றேன். :-)

நன்றி ரவி! enjoy பண்ணீங்களா? அது போதும்.

அது ஒன்னும் இல்லண்ணே., தோன்றத சொல்லணும் இல்லையா? வேனுமேன்னா செய்யப் போறோம் அண்ணே நாமல்லாம்?

ஹலோ ரசிகை, முண்டயில் இவ்வளவு மேட்டர் இருக்குன்னு அண்ணன் சொல்லித்தான் தெரியும். எவ்வளவு வேஸ்ட் பாருங்க உங்க சாரி.

வாசன்ஜி, களை கட்டியிருக்கு போல மலரும் நினைவுகள்! அண்ணன் கடிதம் பார்த்து, நிறைய(முத்துக் கிருஷ்ணன்,மீரா சார், கதிர், அப்புறம், இந்த உங்க பின்னூட்டம் பார்த்து, உருட்டுக் கட்டையில் கதவை தட்டும் மாணவர்கள் என) படம் படமாக விரிகிறது. பேசணும் எல்லாம். பேசுவோம்...

ரொம்ப நன்றி ரிஷபன்? அய்யான்னா யாரு? :-)

நன்றி நர்சிம்!

கமலேஷ் said...

மிகவும் நெகிழ்ச்சியான பகிர்வு.
நிறை குடம் தளும்பாது தெரியும்.
ஆனால் நிறை கடல் கூடவா...

யசோதா.பத்மநாதன் said...

பா.ரா.நீங்கள் தமிழைக் கையாளும் பாங்கு, எடுத்தாளும் பாடு பொருள் - உள்ளடக்கம் அதனை இலகுவாகச் சொல்லிவிடும் உத்தி இவை எல்லாமே வசீகரமும் தனித்துவமும் மிக்கவை.

அதனை ஆனந்த விகடனில் முன்னர் ஒரு போது கண்டு குறித்து வைத்திருந்தேன்.எதிர் பாராவிதமாய் உங்களை தமிழ் மணத்தில் கண்டு கொண்டேன்.

எதைப் பாராட்டுவது? எதை விடுவது?

எல்லாவற்றுக்குள்ளும் ஒழிந்திருக்கிறது அன்பும் நேர்மையும் உண்மையும்.கூடவே தமிழை வளைத்துப் போட்டிருக்கும் அழகும்.

உங்கள் எழுத்துக்கள் பற்றி நான் தனியாக ஒரு பதிவு போட வேண்டும்.

காமராஜ் said...

காளீஸ்வரன் சாரையும் ராஜசுந்தரராஜண்ணாவையும் கலந்து எது வெல்லம் எது அரிசியெனத்தெரியாதபடி பொங்கப்பொங்க படைச்சிட்டிங்க பாரா..
மேல்பட்டன் போட்டுவிடுகிறவர்கள் இருப்பதாலேயே உலகமும் அன்பும் தழைத்திருக்கிறது. அசல்/.

Mahi_Granny said...

நான் பின்னூட்டம் பக்கமே வரலை இத்தனையும் வாசித்த திருப்தியில் .பா. ரா வுக்கு என் பாராட்டுக்கள்

rvelkannan said...

இரண்டு அண்ணன்களும் மாறி மாறி நெகிழ வைப்பது அருமை. இதற்கே தனி பதிவு போடலாம்
நன்றி அண்ணன்கள் மற்றும் நெகிழவைத்த அனனவருக்கும்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படித்து முடித்ததும் அந்த நாளும் வந்திடாதோ என்கிற ஏக்கம் என்னைக் கவ்வியது!!

பா.ராஜாராம் said...

கமலேஷ், நன்றி! ஸ்ரீ நலமா?

ரொம்ப நன்றிங்க மணிமேகலா! இது எனக்கு ஓவர் வெயிட் பாஸ். (தல கிடு கிடுன்னு ஆடுது.)// அன்பும் நேர்மையும் உண்மையும்// இதுலதான் வண்டி ஓடுது மேகலா. நேற்றுதான் நானும் உங்கள் தளம் வந்தேன். என்னவோ, ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

காமு, கூடடஞ்சாச்சா?//மேல்பட்டன் போட்டுவிடுகிறவர்கள் இருப்பதாலேயே உலகமும் அன்பும் தழைத்திருக்கிறது// இல்லையா காமு! நன்றி மக்கா!

ரொம்ப நன்றி மஹி அக்கா! பின்னூட்டங்களில் ஸ்லாங்கமாய் பார்க்க சந்தோசமாய் இருக்கு.

ரொம்ப நன்றி வேல்கண்ணா! :-)

மிக்க நன்றி ஆர். ஆர். ஆர். மூர்த்தி!

பா.ராஜாராம் said...

@அன்பரசன்
ரொம்ப நன்றி மக்கா!

@v.ராதாகிருஷ்ணன்
நன்றி ராதா! புரை ஏறும் மனிதர்கள் உங்களுக்கு பிடிச்சது என தெரியும்.

இப்பதான் கவனிச்சேன். நன்றி சொல்ல உங்களுக்கு விட்டுப் போயிருப்பதை. மன்னியுங்கள் இருவரும்.

இளங்கோ கிருஷ்ணன் said...

ராஜசுந்தரராஜன் எங்களுக்கு மிகவும் பிடித்த நாங்கள் மிகவும் மதிக்கிற கவிஞர். (நாங்கள் எங்கள் என்றால் நானும் என் நண்பன் இசையும்) அவரைப் பற்றி இப்படி ஒரு நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி பாரா. எனக்கு ராஜசுந்தரராஜன் என்றாலே ஏனோ ’கற்றது தமிழ்’ படத்தின் அந்த தமிழாசிரியர் கதாபாத்திரம் நினைவுக்கு வரும். இத்தனைக்கும் அவருடன் எனக்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லை. நாம் மதிக்கும் சிலர் குறித்து அவர்களைப் பார்க்காமலேயே அவர்களை பற்றிய சித்திரம் ஒன்றை நாம் வைத்திருப்போம் அல்லவா. அப்படி எனக்கு அவர் நெகிழ்ச்சியும் வாஞ்சையும் மிக்க ஒரு ஆசிரியர் சித்திரம். நீங்களும் அவரைப் பற்றிய பகிர்வை உங்களது ஆசிரியர் படிமத்திலிருந்து துவங்கியது என்னை நெகிழ வைக்கிறது.

Ashok D said...

இப்படி புரையேறுனா.. உடம்புக்கு என்னாகறது?

பா.ராஜாராம் said...

நன்றி இளங்கோ & மகன்ஸ்.