Wednesday, May 4, 2011

புரை ஏறும் மனிதர்கள்- பதினெட்டு

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் (அ) பயணக் கட்டுரை - ஏழு

ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு ,ஐந்து, ஆறு

வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அறையின் ஜன்னலை திறக்கிற போதெல்லாம், இந்த வேப்பம்பூ வாசனை உள்ளேறி விடுகிறது. நான் வசிக்கும் அல்கோபார் மொத்தமும் இன்னும் ஒற்றை வேம்பு கண்ணில் தட்டியது இல்லை. பிறகெப்படி இந்த வாசனை மட்டும்?

வெயிலோடு வேப்பம்பூ வாசனையை பால்யத்திலேயே தைத்துக் கொண்டு விட்டேன் என்றே தோன்றுகிறது. மருதாணிப் பூ வாசனையை காந்திப் பூங்காவோடும்,வெற்றிலை வாசனையை முனியம்மாள் அக்காவோடும், திருநூறு வாசனையை வீராயி அம்மாச்சியோடும், கடுக்காப்பழ வாசனையை அப்பா தொலைத்த வயலோடும் தைத்துக் கொண்டதெல்லாம் பால்யத்தில் இருந்துதானே. முதன் முதலில் எதோடு எதை தைத்துக் கொள்கிறோமோ அதுதானே கடைசி வரையில்.

வாணியங்குடி வீட்டில் வைத்துத்தான் வெயில் அதன் வேப்பம்பூ வாசனையை எனக்குக் காட்டித் தந்தது. வீட்டிற்கு ரொம்ப பக்கமாத்தான் வெயில் நின்று கொண்டிருக்கும். வாசனையை மட்டும் உள் அனுப்பும். வாசலில் நிற்கிற வேம்பில் நனைந்து வருவதாலோ என்னவோ அவ்வாசனை பெரும்பாலும் வேப்பம்பூ வாசனையை ஒத்திருக்கும்.

ஊரில் பிறந்தாலும் உலகத்தில் பிறந்தாலும் வெயில் மட்டும் ஒரே வாசனையைத்தான் கொண்டிருக்கிறது. வேப்பம் பூ வாசனையை.

ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன மஹா திருமணம் முடிந்து. வெளியில் நின்று கொண்டு வாசனையை மட்டும் உள் அனுப்புகிற வெயில் மாதிரி மனிதர்களும், சம்பவங்களும், நிகழ்வுகளும் உள்ளேறி வருகின்றன. எனையறியாது செத்த தள்ளி அமர்கிறேன். நகர்ந்த தூசி வாசனையாய் புகைகிறது..

அக்டோபர் 21 திருமணம். 19 இரவு வந்துவிட்டார் சரவணன். சவுதிக்கு கிளம்பவேண்டிய பெட்டி படுக்கைகள் கைகளில். இரண்டு வருஷத்தைத் தாங்க வேண்டிய சிரிப்பு முகத்தில். பெட்டி படுக்கைகளை விட விடை பெற்று வந்த சிரிப்பு பளு நிறைந்ததாக இருந்தது. இப்படியான சிரிப்பை, பார்ப்பதை விடக் கடினம் உணர்வது.

'இத விடுங்கண்ணே. ஆக வேண்டியதைப் பாருங்க' என்ற சரவணன் அசால்டான புன்னகைக்குள் இறங்கிக் கொண்டிருந்தார். அழுத்தங்களை மறைத்துக் கொண்டு சிரிக்கிற மனிதர்கள் அது ஒரு அழகாகத்தான் இருக்கிறார்கள். அடர் வேம்பின் நிழலில் புள்ளி புள்ளியாகப் பெய்து கொண்டிருக்கிற வெயில் மாதிரி.

நண்பர்களே பிரதான உறவுகள் நம் மஹா திருமணத்தில் என முன்பே சொல்லியிருந்தேன். இல்லையா? இதோ முதல் உறவு வந்தாச்சு. இனி தானாகவே வரும் திருமண வீட்டுக் களையும் என நானாகவே தயார் படுத்திக் கொண்டிருந்தேன் தகப்பன் மனசை. (ரொம்பத் தெரிஞ்சவன் மனசுங்க. கூட நிக்காட்டி எப்படி?) 'ஃப்ரெண்ட்ஸ்களை நான் பார்த்துக்கிறேண்ணே. ஆக வேண்டியதைப் பாருங்க' என வந்ததில் இருந்து வேறு வேறு மாதிரி சிரித்துக் காட்டினார் சரவணன்.

'ஆக வேண்டியதா? அப்படின்னா? ' எனத் தோன்றியது எனக்கு.

மஹா பிறந்தாள். வளர்ந்தாள். பள்ளி சென்றாள். மீண்டும் வளர்ந்தாள். கல்லூரி சென்றாள். மீண்டும் வளர்ந்தாள். கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள்.

இதில் ஆக வேண்டியதாக என்ன செய்தேன் என்றால் எனக்குப் பிடித்த பெயரான மகாலக்ஷ்மியை என் மகளுக்கு வைத்தேன். நினைத்த போதெல்லாம் கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். இது இவ்வளவு ஆகுமா என்ன?

சரவணனை அறையில் தங்க வைத்து, ரெண்டு மடக்கு நெப்போலியனை ஊற்றிக் கொண்டு, 'காலையில் வெள்ளனமா வர்றேன். தயாரா இருங்க சரவணா. சென்னையில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் நண்பர்கள் வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் இருந்து கும்க்கி வருவதாக சொல்லியிருக்கிறார். சாத்தூரில் இருந்து மாது காமு வரலாம். d.r.அசோக் ஃபேமிலியோடு வருவார்ன்னு நினைக்கிறேன். எல்லோரையும் ரிசீவ் பண்ணனும்' என்றேன். அக்பரும் வருவதாக சொல்லியிருக்கிறார்ண்ணே. இதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க நிம்மதியா போய்ட்டு வாங்க' என்றார்.

அவ்வளவு ஹாயாகத் திருமணம் நடத்திய தகப்பன் அனேகமாக நானாகத்தான் இருப்பேன். அவ்வப் போது அண்ணாத்துரை சித்தப்பா, அண்ணன்கள் அழை பேசி , 'என்னடா செஞ்சு வச்சுருக்க?' என்பார்கள். 'எல்லாம் நல்லபடியா நடந்துக்கிட்டு இருக்கு சித்தப்பா. ஒரு ஆளாப் பாக்குறதுதான் கொஞ்சம் மலைப்பா இருக்கு' என்பேன்.

'ஒரு ஆளா பாக்கிறயா? அப்படி என்ன வேலை இருக்குன்னு பாக்கற? யாருக்கும் பத்திரிக்கை கொடுக்கப் போறதில்ல. பத்திரிக்கை வைக்கிறதுதான் பெரிய வேலை. அதே இல்லை உனக்கு. பிறகு என்ன வேலை பாக்கற?' என்பார். வாஸ்தவமான கேள்விகளை நிறைய வைத்திருப்பார் சித்தப்பா. பதிலாக நான் சில சிரிப்புகளை வைத்திருப்பேன். பரஸ்பரம் பரிமாறிக் கொள்வோம்.

சித்தப்பா சொன்னது போல் தான். மணமகன் வீட்டில் திருமணம். நாற்பது அம்பது நண்பர்கள் வருவார்கள் எங்க சார்பா' என்று சொல்லி வைத்திருந்தேன். பெண்ணழைத்துக் கொண்டு காலையில் போய் இறங்கினால் போதும். தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு வாங்கப் போகும் அலைச்சல்கள் மட்டுமே இருந்தன. அதற்கும் நண்பர்கள் இருந்தார்கள்.

நகண்டு நகண்டு தேர் ரத வீதிக்கு வந்து விட்டது.

இருபதாம் தேதி காலை. சிவகங்கையை நெருங்கி விட்டதாக தோழர் கும்க்கியிடமிருந்து sms வந்தது. நானும் முத்துராமலிங்கமும் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டோம். கும்க்கி மட்டுமே பதிவுலகில் என்னை தோழர் என்றழைப்பவர். எல்லா விளிப்புகளுமே எனக்கு டொம்மா டொம்மான்னுதான் இருக்கும். அப்பாவின் முண்டா பனியனை போட்டு விளையாடும் ஐந்து வயது சிறுவனைப் போல்.

குழந்தைகள் அப்பா என்றழைப்பதையே எனக்கு பல சமயம் நம்ப முடியாமல்தான் வரும். குழந்தைகளின் அம்மாக்காரி மட்டும் நம்புகிறாளே என்கிற போட்டியில்தான் ஆரம்பத்தில் நம்பத் தொடங்கினேன். பிறகு அதுவே பழக்கத்திற்கு வந்து விட்டது. வம்படியா நம்புவதுதானே வாழ்க்கையும்.

தோளில் பையும் கையில் வாட்டர் பாட்டிலுமாக வந்திறங்கினார் தோழர் கும்க்கி. பின்னூட்டங்களில் அறிமுகமாகி அழை பேசியில் பேசி வந்திருக்கிறேன் கும்க்கியுடன். குரல் வரைந்து தந்திருந்த சித்திரத்துடன் நான் கும்க்கியை தேடிக் கொண்டிருந்தேன். 'உன் சித்திரமெல்லாம் உம்மட்ல. நான் கும்க்கியாக்கும்' என்பது போல புத்தம் புதுசாக நின்றார் கும்க்கி.

இரண்டு வருடங்களாக வரைந்து வரைந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு முகம் சட்டென கலங்கி, உடைந்து, ஒழுகத் தொடங்கியது. என் சித்திரத்தில் அவருக்கு ஜீன்ஸ் பேன்ட், T-ஷர்ட் இல்லை. கன்னச் சுழிப்பு இல்லை. நெற்றிச் சுருக்கம் இல்லை. சொல்லப் போனால் எதிரில் நிற்கும் கும்க்கி என் கும்க்கியே இல்லை. யாரைக் கேட்டு இவ்வளவையும் வைத்துக் கொண்டு வந்து எதிரில் நிற்கிறார் என்று சற்று தடுமாற்றமாக இருந்தது.

நெற்றி சுருங்கி, 'பாரா?' என்று சிரித்தவரை நீங்க பாக்க முடியாமல் போச்சே மக்கா. சரி விடுங்க. நானும்தான் இனி பார்க்க முடியாது என் பழைய கும்க்கியை. ஒண்ணுக்கு ஒண்ணு சரியாப் போச்சு. சரியா? நொடி என உச்சரிக்கிற நொடியில் நொடி கடந்து விடுகிறது. பிறகு நம் கையில் என்ன இருக்கிறது. இல்லையா?

கும்க்கியை அழைத்துக்கொண்டு லாட்ஜ் போனோம். கும்க்கியும் சரவணனும் அறிமுகமாகிக் கொண்டார்கள். சரவணன் குறித்த சித்திரத்தை கும்க்கியும் கும்க்கி குறித்த சித்திரத்தை சரவணனும் ஒழுக விட்டிருக்கக் கூடும். பாவம், அவரவர்க்கு அவரவர் பாடு.

இந்த நேரத்தில் தெய்வாவிடமிருந்து அழைப்பு வந்தது. சிவகங்கையை நெருங்கி விட்டான். 'பேசிக்கிட்டிருங்க வந்துர்றோம்' எனக் கிளம்பினோம் நானும் முத்தும். பஸ் ஸ்டாண்ட் போவதற்கும் தெய்வா இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

லக்ஷிமியுடன் வந்திருந்தான் தெய்வா. ' என்னடே..அப்படியே இருக்க? மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறவன் மாதிரியா இருக்கான் பாரு?' என லக்ஷ்மியைப் பார்த்துச் சிரித்தான். மலர்ந்து சிரித்தார்கள் லக்ஷ்மி.

முகத்தைப் பார்த்து, பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான் தெய்வா. பதினைந்து வருடங்களாகத் தவற விட்ட சிரிப்பு. ரொம்பெல்லாம் பேச மாட்டான் தெய்வா. ஒரு சிரிப்பு. சிரிக்கும் போதே கை பற்றுவான். சகலத்தையும் திணித்து விடுவான். அப்படியேதான் இருந்தான் இப்பவும்.

'வீட்ல தங்கலாம்டா. ரூமும் இருக்கு. என்ன செய்ற?' என்றேன். 'எதுனாலும் சரிடா. ரூம்ல தங்கிட்டா அவுங்களுக்கு சிரமம் இருக்காது' என்றான். இப்படில்லாம் யோசிப்பான் தெய்வா கிறுக்கன்.

'மாப்ள லாட்ஜுக்கே போகலாம்' என்றேன் முத்துவிடம். வண்டியை நோக்கி நடந்து கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் என் கை பற்றினான் தெய்வா. கையை இடது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வலது கையால் என் கையிலேயே அடித்துக் கொண்டிருந்தான். ஒரு குழந்தை மாதிரி.

'என்னடா?' எனச் சிரித்து அவன் முகம் பார்த்தேன். கண்களுக்கும் அவன் கண்ணாடிக்கும் நடுவில் விழப் போவது போல தொங்கிக் கொண்டிருந்தது அது. அதை நீர் என்றால் நீர். நட்பென்றால் நட்பு. 'லூசுப் பயலே' எனச் சிரித்து தோளுடன் இறுக்கிக் கொண்டேன். இந்த சிரிப்பு மட்டும் இல்லாவிட்டால் என்னவாகியிருக்கும் உலகு?

தெய்வா லக்ஷ்மியை அறையில் சேர்த்துவிட்டு கும்க்கி சரவணனை அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேசன் கிளம்பினோம். சென்னையில் இருந்து வருவதாக சொன்ன நண்பர்களில் மணிஜி, வாசுவை முன்பே சந்தித்து விட்டேன். கூடுதலாக ராஜசுந்தரராஜன் அண்ணன், நர்சிம், வித்யா(விதூஸ்) வருவதாக சொல்லியிருந்தார்கள்.

நேரத்திற்கு வந்து விட்டது ட்ரெயின். இரண்டு தடம். கூடுதலாகப் போனால் மூணு ட்ரெயின். நேரத்திற்கு வராமால் போனால்தான் உதைப்போம். ராஜசுந்தரராஜன் அண்ணன், மணிஜி, வாசு வந்திறங்கினார்கள்.

புகைப் படத்தில் பார்த்ததுதான் ராஜசுந்தரராஜன் அண்ணனை. பார்த்து விடமாட்டோமா என தவமாக தவமிருந்த அண்ணனை. நண்பர்களும், அண்ணனும் பார்த்ததும் கை உயர்த்தினார்கள். சிரித்தார்கள். நெருங்கினார்கள்...

-தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16,17


26 comments:

க ரா said...

இன்னிக்கும் எனக்குத்தான் வாச்சுருக்கு போல... கம்பூயூட்டர்ல எஃப்5 கீ இருந்த தடமே தெரியல.. யாராச்சும் எதுனாச்சும் எழுதீருக்க மாட்டாங்களான்னு அத அழுத்தி அழுத்தி தடமே தெரியல.. என்னா எழுத்து மாம்ஸ்.. கூடவே கை பிடிச்சி நடத்தி கூப்டுட்டு போற மாதிரி.. நிரைய மிஸ் பண்ணிட்டேன் நான்.. இன்னொரு தருணம் இப்படி எப்ப வாய்க்கும்னு தெரியல.. வேற எதுவும் சொல்ல தோணல..

க ரா said...

//தோளில் பையும் கையில் வாட்டர் பாட்டிலுமாக வந்திறங்கினார் தோழர் கும்க்கி. பின்னூட்டங்களில் அறிமுகமாகி அழை பேசியில் பேசி வந்திருக்கிறேன் கும்க்கியுடன். குரல் வரைந்து தந்திருந்த சித்திரத்துடன் நான் கும்க்கியை தேடிக் கொண்டிருந்தேன். 'உன் சித்திரமெல்லாம் உம்மட்ல. நான் கும்க்கியாக்கும்' என்பது போல புத்தம் புதுசாக நின்றார் கும்க்கி.

//

நானும் வரைஞ்சு வெச்சிருந்தேன் மனசுகுள்ள உங்கள பத்தி.. பாதி வெள்ள முடி, ஒரு கண்ணாடி அப்புறம் வெள்ள வேட்டி சட்டைல எங்க தமிழய்யா மாதிரி.. ஆனா நீங்க என்ன விட யூத்தால இருக்கிங்க :)

வினோ said...

அப்பா இப்படி தான் ஒவ்வொரு ஓவியமா மாறிக்கிட்டு வருது எனக்கு....

ஓலை said...

அருமையான விவரிப்பு, அறிமுகம், ...

தொடரட்டும் பா.ரா.

நிறைய பேரோட பின்னூட்டங்களை, படங்களைப் பார்க்கிறோம். ஆனால் உங்களைப் போன்றவர்களின் விவரிப்பினால் அவர்களது அருமையையும் உணர முடியுது.

நசரேயன் said...

ஒலையாரை வழி மொழிகிறேன்

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் பா.ரா

வேலை மற்றும் சோம்பல்
அடிக்கடி வரமுடியாமல் போய்விட்டது

கவி அழகன் said...

கண்ணை கட்டி குட்டிடு போற மாதிரி இருக்கு

vasu balaji said...

/கண்களுக்கும் அவன் கண்ணாடிக்கும் நடுவில் விழப் போவது போல தொங்கிக் கொண்டிருந்தது அது. அதை நீர் என்றால் நீர். நட்பென்றால் நட்பு. /

லூசுத்தனம் இல்லாம நல்ல நட்பு இல்லவே இல்லை பா.ரா.

CS. Mohan Kumar said...

அருமை பாரா. பல வரிகள் அடுத்த வரிக்கு போக முடியாமல் ப்ரேக் போட்டு விடுகிறது. இந்த தொடர் முழுக்கவே இப்படி நடக்கிறது. புத்தகமா போட்டே ஆகணும். ஆமா !!

Ashok D said...

ஆங் ரைட்டு...

சித்தப்ஸ் நம்ம எபிசோடு சும்மா கும்முன்னு வர்னும் ஆமா சொல்லிபுட்டேன்.. :)

Anonymous said...

\\வெயிலோடு வேப்பம்பூ வாசனையை பால்யத்திலேயே தைத்துக் கொண்டு விட்டேன் என்றே தோன்றுகிறது.
முதன் முதலில் எதோடு எதை தைத்துக் கொள்கிறோமோ அதுதானே கடைசி வரையில்.//

வுண்மைதான் பாரா.

பனித்துளி சங்கர் said...

நேர்த்தியாக ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள . பிரபலங்கள் என்று இல்லாமல் எதார்த்தவாதிகளை பிரபலங்களாக உருவாக்கும் திறமை உங்களின் பதிவிற்கு உண்டு .வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

புரை ஏறும் மனிதர்களுக்குப் பெரிய இடைவெளி கொடுத்து விடுகிறீர்கள் பா.ரா. பொருத்திக்கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படுகிறது.

இந்த எபிசோடும் கடும்வெயிலுக்குப் பின் மாலையில் காய்ந்த மண்ணில் தெளிக்கப்படும் நீரையும் அதில் தொட்டு தவழ்ந்து வரும் காற்றையும் நினைவுபடுத்துவதாய்.

அமர்க்களம்.

thendralsaravanan said...

நினைவேடுகள் நல்லா வந்திருக்கு!

rajasundararajan said...

//வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அறையின் ஜன்னலை திறக்கிற போதெல்லாம், இந்த வேப்பம்பூ வாசனை உள்ளேறி விடுகிறது//

பொறந்த மண்ணு அப்படி! மீராவைப் பற்றி உங்களுக்கு நான் எழுதிய மடலில், அவரைப் பார்க்கப்போன வேளை சன்னலுக்கு வெளியில் இருந்து வேம்பின் கிளை எட்டிப் பார்த்ததைக் குறிப்பிட்டு இருப்பேன். கூடப் பொறந்து, கூடி விளையாட நிழல் கிளை கொடுத்த அது, நம் கூடவே சுவறிக் கிடக்கும்தானே?

//குழந்தைகள் அப்பா என்றழைப்பதையே எனக்கு பல சமயம் நம்ப முடியாமல்தான் வரும். குழந்தைகளின் அம்மாக்காரி மட்டும் நம்புகிறாளே என்கிற போட்டியில்தான் ஆரம்பத்தில் நம்பத் தொடங்கினேன். பிறகு அதுவே பழக்கத்திற்கு வந்து விட்டது.// இது செமை (class)!

சிநேகிதன் அக்பர் said...

அடிக்கடி புரையேர வையுங்க அண்ணே.

நேசமித்ரன் said...

எங்க போகப் போறீரு ? சிக்குவீருல்ல ! அன்னைக்கு இருக்கு கச்சேரி :)

ஓலை said...

Yenga Nesanai patri oru special episode varanum paa.raa.

Sachi said...

அடர் வேம்பின் நிழலில் புள்ளி புள்ளியாகப் பெய்து கொண்டிருக்கிறது வெயில்! அருமை!!

இரசிகை said...

anbu......!

vazhthukal rajaram sir:)

பா.ராஜாராம் said...

மாப்ஸ் இரா, நன்றி!

நன்றிடா வினோ! (மாறும் ஆனா மாறாது)

சேது, நன்றி!

நன்றி நசர்! ரெண்டு ம்ம் ரெண்டு வழி மொழிகிறேன் சொல்லிட்டீர். கோட்டா அவ்வளவுதான். கேட்டீரா?

வணக்கம் சேகர்! நலம். நலமா? ஃப்ரீயா இருக்கப்போ வாங்க. நன்றியும்

நன்றி யாதவன்!

நன்றி பாலாண்ணா! :-)

போட்டுருவோம் மோகன். மிக்க நன்றி!

ஆங் அசோக்! நன்றி! :-)

இந்து, மிக்க நன்றி!

நன்றி ப.து.சங்கர்! யதார்த்த வாதிகள்தானே நமக்கெல்லாம் பிரபல வாதிகள்! :-)

நன்றி சுந்தர்ஜி! 'புரை ஏறும் மனிதர்களை' மனசு பொங்கி வரும்போது மட்டும் எழுத விருப்பமாக இருக்கிறது சுந்தர்ஜி. தண்ணி தெளித்து மனசமர்த்திக் கொள்வது போல. இதில் என்னை இப்படியே விட்டுருங்களேன் ப்ளீஸ்.

நன்றி தென்றல்சரவணன்!

ரா.சு. அண்ணே, ரொம்ப நன்றி!

அக்பர்ஜி, சுந்தர்ஜிக்கு சொன்னதே உங்களுக்கும். நன்றி மக்கா!

இனிமே தனியா வேறு சிக்கனுமா நேசா? நன்றிடா பயலே.

அதென்ன எங்க நேசன் சேது? அவன் நம்ம நேசன்! நன்றி மக்கா! :-)

Sachi , நன்றி! எப்படி அழைக்கட்டும் சசியா?..

ரசிகை என்ற சேவியர்அம்மா, :-) .நேசன் மெயில் அனுப்பித் தந்தான். ரொம்ப சந்தோசமாக இருந்தது. மெயில் செய்றேன். நன்றி மக்கா! இனி உங்களை மக்காஸ்ன்னு சொல்லணும் இல்ல? happiest moment! :-) கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மிருணாவின் எதெற்கென? உங்கள் பார்வையில் பட்டது சந்தோஷமாக இருந்தது.நல்ல கோணமும் பார்வையும் மொழியும் கொண்ட நவ கவிஞர்.

பத்மா said...

பா ரா அருமை ...நல்லா இருக்கீங்க தானே

பா.ராஜாராம் said...

சுந்தர்ஜி

சுந்தர்ஜி உங்க கமென்ட் மிஸ் ஆகி இருக்கிறது. மிருணாவின் (கவிதை குறித்தது) ப்ளாக்கர்ல ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன். மிருணாவின் கவிதை கூட மிஸ் ஆகி அப் டேட் ஆகாமல் இருக்கிறது. தம்பிக்கு மெயில் செய்திருக்கிறேன். சரி பண்ணுவான். நன்றி சுந்தர்ஜி!

@ பத்மா

நல்லாருக்கேன் பத்மா. நீங்க நலமா? நன்றியும் மக்கா!

Kumky said...

அன்றைக்கே வாசித்துவிட்டேன் தோழர்...

ஒழுங்கான பின்னூட்டம் போடத்தான் நேரமும் மனசும் அமைய மாட்டேங்குது...:)))

பா.ராஜாராம் said...

ஒழுங்கற்று இருப்பதுதானே அழகு தோழர்! அதுதானே வேணுமும் கூட. கும்க்ஸ் நன்றி! :-)