"கவிதைல்லாம் எழுதி பேமஸ் ஆயிட்டியாமேடா? சித்தப்பா வந்து சொன்னுச்சு"என்று சமீபமாய் அம்மா, அழை பேசும்போது விசாரித்தாள். குடும்ப விஷயங்கள் எவ்வளவோ பேசினோம். ஆனால் அம்மா கேட்ட இந்த கேள்வி மட்டும் சுழன்று கொண்டே இருந்தது. வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் முன் அம்மாவை அப்பா கேலி பேசும்போது அம்மா, காதோரத்தில் சுருண்டு தொங்கும் முடியை காது மடல் பின் புறமாக ஒதுக்கியபடி, புன்முறுவலுடன் உள் விரைவது நினைவு வந்தது. அந்த அம்மா போல இருக்க விரும்பினேன், அத்தருணம்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் குரல்தான் மக்கா, முன்ன பின்ன நகர்த்தும் ஆதார சுருதி. அம்மா, மனைவி, மகள், மகன், சகோதரிகள் அழைக்கிற குரல் அடையாளங்கள்தான் அன்றைய பொழுதின் வெளிச்சம் அல்லது இருட்டு.
தற்சமயம் குடும்பம் போலவே ஆகிப் போன நண்பர்களும் வலை உலக நண்பர்களும் உண்டு. அப்படி குரல்கள் மூலம் தேடி அடையும் நண்பர்கள் குறித்து பேச விருப்பம் இப்பதிவில்.
குரல் வழி சிற்பங்கள்
குமார்ஜி, தெய்வா, சுந்தரா
"வச்ச இடம் தெரியாமல் எடுத்த இடம் தெரியாமல்..." என்று லதாதான் அடிக்கடி என்னை திட்டிக்கொண்டே இருப்பாள். பொருள்களை போன்றே நான் மனிதர்களையும் தொலைத்தது உண்டு. மிக நெருக்கமாய் இருந்த நண்பர்களை, காலம் சுழட்டி எறிந்த ஒரு திருப்பத்தில் தொலைக்க நேரிட்டது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அவர்களை தேட இயலவில்லை. அவர்களும் கிடைத்தார்கள் என நிகழ வில்லை.
தளம் தொடங்கி தொலைத்த கவிதைகளை எல்லாம் நினைவு வழியாக மீட்டெடுத்து இதில் பதிய தொடங்கிய சில காலங்களில் சற்றும் எதிர பாராது மூன்று மனிதக் கவிதைகள் கை அடைந்தது. முன்பு கால திருப்பத்தில் தொலைத்ததாக சொன்னேனே அந்த நாலில் மூன்று..! மணிபர்சை தேடிக்கொண்டிருக்கிற போது முன்பு எப்பவோ தொலைத்த பேனா கிடைக்குமே அது போல! இன்னும் ஒரு கவிதை பாக்கி. ப்ரபா என்கிற பெண் கவிதை.
ப்ரபாவையும் தேட போவதில்லை. தேடியா கிடைத்தார்கள் இந்த மூன்று பேரும்? வழக்கம் போல தேவைக்கு தீப்பெட்டியை தேடினால் போதும், தொலைத்த பென்டார்ச் கிடைத்தாலும் கிடைக்கும். பார்க்கலாம்..
அப்படி கிடைத்த மூன்று பேர்தான் இந்த குமார்ஜி, தெய்வா, சுந்தரா.
குமார்ஜி
கிடைத்த குஷியில், "ஏலே ஒரு கடிதம் எழுதுலே.." என்று கேட்ட குமார்ஜியின் குரலில் பதினைந்து வருடமாய் கேட்க்காத மூப்பு தெரிய காணோம். எங்கு தொலைத்தேனோ அங்கிருந்தே எடுத்துதருகிறான் அவன் குரலை. கீதாஉபதேசம் போல..! கைக்குழந்தையாய் இருந்த குழந்தை குட்டி எல்லாம் கல்லூரிக்கு நடக்கிறார்கள் என்று அவன் குரலில் கேட்கிற போது "அடச்சே நரை கூடி போச்சேடா நமக்கும்" என்று உணர வாய்க்கிறது. அதே வெள்ளந்தியான மனசையும், குரலையும் அதே குரல்வழியாக அனுப்பி தருவதை பெறும் போது, என்ன பெரிய பதினைந்து வருடங்கள் என்று தோனுகிறது.
தெய்வா
நண்பர்கள் குடும்பத்தில் யார் பிறந்த நாளையும் மறப்பதில்லை இவன். மனைவி லக்ஷ்மியை கொண்டு அழகழகு வாழ்த்து அட்டைகளை வரைய வைத்து வீடு அனுப்பி தருவான். முதல் நாளோ, சரியாய் அன்றோ கை அடையும் வாழ்த்து அட்டைகள்! பதினைந்து வருடங்களுக்கு அப்புறமும் தேதிகளை நினைவில் வைத்திருக்கிறான். வாழ்த்து அட்டைகள் குறித்து தற்சமயம் இவனிடம் விசாரித்தேன். "இல்லைடா..எல்லாம் இப்ப போன் விசாரிப்புகளோடு முடிந்து போகிறது" என்றான். மழுக்கென, எதுவோ முறிந்தது போல் உணர்ந்தேன். எல்லா முறிவுகளையுமா தேடி பார்க்க தைரியம் வருகிறது?
சுந்தரா
புகைப்படங்கள் வாயிலாக இவனை பார்க்கவும் வாய்க்கிறது, தளங்களில். குரலையும், ஞாபக திறன்களையும் அப்படியே வைக்க தெரிந்த இவனால், தலை முடியை பத்திர படுத்த இயலாமல் போய் விட்டது போல. போகட்டும்டா சுந்தரா. நீ ஒரு நாள், கை மறதியாய் வைத்த டி.வி. ரிமோட்டை தேடு. ஒருவேளை தலை முடிகள் கிடைத்தாலும் கிடைக்கும். யாராவது ஒரு ஆள் வேணும்தானே... தொலைந்த பதினைந்து வருடங்களை காட்டித்தர.
நேசமித்திரன்
"மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட.." என்கிற பாடலை இன்று நான் கேட்க்கிறபோதும் கண் கிறங்கி இன்னொரு உலகம் நகர்வது உண்டு. அங்குதான் நான் பிராயமாய் இருந்தேன். பெல்ஸ், ஸ்டெப்கட்டிங், அரும்புமீசை, மாமா என்றழைக்கிற அவளின் குரலுக்காக பைத்தியம் பிடித்து அலைந்த மனிதனென. அப்படியேயான அன்பும், உயிர் சுண்டலும் நேசன் அழைக்கும் "என்னண்ணே" என்கிற குரலில் கிடைக்கிறது எனக்கு.
தென்னைகள் சூழ்ந்த ஆற்றங்கரையோரத்து பழைய கோவில் ஒன்றிற்கு கை பிடித்தழைத்து கொண்டு செல்கிறது அது. தேங்காய் சாதமும் துவையலும் தருகிறது. தேங்காய் சாதத்தின் ருசி எனக்கு அங்கிருந்து கிடைத்ததே. துவையலை பாம்பு போல உருட்டி "பாதி பாம்பு உனக்கு பாதி பாம்பு எனக்கு" என்று கெக்கலித்து சிரித்து சாப்பிட்ட காலங்களோடு பொருத்துகிறது. ஆண் உணர்வு தாண்டி, குரல் செதுக்கும் சிற்ப்பங்களுக்கு கேள்வி, கேட்பாடு இல்லைதானே? ஒருவேளை இவன் கவிதைகள் என்னை எடுத்து சென்று அந்தரத்தில் விட்டு அழகு பார்க்கும் கோலம், காரணமோ என்னவோ?
இன்னும் சிலர் உண்டு அவர்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்..
புரை ஏறும் மனிதர்கள்-இரண்டு
புரை ஏறும் மனிதர்கள்–ஒன்று
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
க்ளாஸ்...
தயவுசெய்து எனக்காக நாவல் எழுதுங்கள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
புரை ஏறும் மனிதர்களுடன்
அம்மாவின் குணம்,
இளமைக்காலம்,
அருமை அண்ணே
அண்ணே இப்போதைக்கு என்னால ஒன்னும் எழுத முடியல அப்புறம் வந்து பின்னூட்டம் போடுறேன்
நெஞ்சுக்குழி அடைக்குதுய்யா....
கிளாஸ் வர்ணனைகள் தலைவா..
செம்மொழி மாநாட்டில் சேர்க்க வேண்டிய தீர்மானம். பா.ரா.வின் உணர்வெழுத்தும் இலக்கணத்தில் சேர்க்கப் படுமென்பது.:)
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் குரல்தான் மக்கா,முன்ன பின்ன நகர்த்தும் ஆதார சுருதி. அம்மா,மனைவி,மகள்,மகன்,சகோதரிகள் அழைக்கிற குரல் அடையாளங்கள்தான் அன்றைய பொழுதின் வெளிச்சம் அல்லது இருட்டு//
கரெக்ட் தான் அண்ணே,, பிரிவால் ஏங்கித் தவிக்கும் மனதுக்கு குரல் தானே எல்லாம்... நினைவிலேயே ஓடும் வண்டி சார்ஜ் செய்துகொள்வது குரலாலும் கடிதங்கள் மூலமாகத்தானே... மிக அருமை உங்கள் எழுத்து.. அமைதியான ஒரு நதிக்கரையில் தென்றலோடு நண்பர்கள் நடுவில் சுகமான அனுபவ பகிர்தலைப்போல...
சம்பந்த்தப்பட்டவர்கள் நிச்சயம் விக்கித்துப் போவார்கள் ... புரை?? அது நீங்கள் எழுதும்போதே அவர்களுக்கு தட்டியிருக்கும்..:))
:)நெகிழ்வான பதிவு பா.ரா... நேசமித்ரன்... மற்றைய நேயங்கள்... கண்ணு படப் போறது...
உங்கள் குரலைக் கேட்கிறேன் இப்பதிவு வழி, ரொம்ப நெகிழ்வாய் உணர்கிறேன்.
:)
எதிர்பாராமல் இழந்துவிட்ட பால்யத்தின் பரிசுத்தமான நட்பை பல வருடங்களுக்குப் பின் கண்டுகொள்ளும்போது அடையும் சந்தோஷத்துக்கு ஈடாக வேறெதும் இருக்கிறதா பா.ரா அண்ணா.
//நேசமித்ரன் said...
நெஞ்சுக்குழி அடைக்குதுய்யா....
//
எங்களுக்கும்...!!! படிக்க படிக்க இனிமையா இருக்குங்க..!!! மனம் வருடும் எழுத்துக்கள் பா.ரா !!!
நல்லா இருக்குங்க!!!
அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள் நண்பர் பாரா அவர்களே.
வலைப்பதிவில் மற்றவர்கள் எழுதுவதைப் படித்துக் கொண்டு இருந்தாலே போதுமானது போலிருக்குங்க. நாமெல்லாம் என்னத்த எழுதி கிழிக்கப் போறோம் என்ற எண்னம் எழுகின்றது.
வருடங்கள் மாறியும்
வாசமும் நேசமும் மாறா
நண்பர்களை நானும்
பதினான்கு வருடங்களுக்கு பிறகு
சந்தித்தேன் உங்களைப்போல்...
நட்பில் இல்லாத
ஈரமும் ஈர்ப்பும்
புவியிலும் கவியிலும்
கிடைத்திடுமோ..!
நானும் உங்களைப்போல்
புரையேறிக்கொண்டு...
அருமையான எழுத்தும் நெகிழ்ச்சியான நினைவுகளும்..
நெகிழ்வான பதிவு
பழைய நினைவுகள் நெகிழ்ச்சியாகத் தான் உள்ளது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தினந்தோறும் ஒன்று இரண்டு என வருடம் பூராவும் 400 , 500 பேரையாவது வாழ்த்தும் பொழுது...
வாழ்த்து அட்டைகள் வரைவதில் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது.
பிள்ளைகள் பெரியவர்கள் ஆகிற நேரத்தில் நமது priority வேறு வேறு..
எனக்குத் தெரியும்.. நீ சமாதானம் ஆக மாட்டாய் என்று..
இருந்தாலும் இது தான் நிஜம்..
உனக்காக ஒரு கவிதை என் வலைதளத்தில்..
deivastvm.blogspot.com
விடுபட்டுப்போன தருணங்களை
வாரி வாரி இறைக்கிறது பாராவின்
எழுத்து.
பல தடவை அம்மா சங்கோஜத்தோடு
சமயற்கட்டு திரும்புகிற பிமபம் தெரிகிறது.
அன்பு பாரா,
குரல் வழி சிற்பங்கள்? என் அப்பாவின் குரலை சேகரித்து இன்னும் அடர்த்தியாக்கி என்னுள் வைத்திருக்கிறேன். காற்றாகி கலக்கும் குரலில் திடவடிவம் பாதுகாப்பது எளிது. என்ன முயன்றாலும் என் அப்பாவின் குரல் வடிவம் ஒரு பால் சுரக்கும் பெண் வடிவில் தான் முடிகிறது. அப்பாவின் தண்மை அப்படி பாரா! அற்புதமான மனுஷன்! நீங்களும் அதே போல தான், நேற்று மஹாவிடம் பேசும்போது கூட சொன்னேன் உங்க அப்பா ஒரு அற்புதமான மனுஷன் என்று. நான் சொல்லி தெரியனும்கிற அவசியம் மஹாவுக்குக் கிடையாது தான் என்றாலும் எனக்கு உங்களைப்பற்றி தெரிந்த ஒரே விஷயம் இது தான் பாரா. உங்கள் குரலை சரடாக இழுத்து நெய்ய ஆரம்பித்தால் எல்லாவர்ணங்களிலும் நீங்கள் என் தகப்பனாய் தெரிகிறீர்கள். தகப்பன்கிறது ஒரு நிலை தானே பாரா, அது உறவு மட்டுமா என்ன?
உங்களுக்கு மட்டும் தான் தெரிகிறார்கள் அன்பின் வலியவர்கள், குமார்ஜி, ஜியோவ்ராம்சுந்தர் மற்றும் நேசமித்ரன். உங்களிடம் நம்பர் வாங்கி நேசமித்ரனுடன் பேசிய போது, ஒன்றுமெ சொல்லாமல், நீங்க வைங்க ஃபோன நான் கூப்பிடுறேன். எதுக்கு காச செலவழிக்கிறீங்கன்னு! இப்படி எல்லாம் அக்கறை வழிய என்னால் முடியாது. உணர்வுகளும், புத்தியும் ஒன்றினைந்து குவிகிறது உங்கள் எல்லா நட்பிலும். உங்கள் நண்பர்கள் எல்லோரும் ஒரே மண்ணில் வனைந்தவர்கள் உங்களைப்போலவே.
நம்ம மக பேசினா என்னோடு. அலுவலகத்தில் இருந்ததால், அதிகம் பேச முடியவில்லை. மிக அன்பாய் அப்பா என்றாள், அம்மா எப்படி இருக்கிறார் என்றாள். குரல் என்னை கொன்று போட்டது பாரா. குரல் வழிந்து பெருகி என் முன்னே நான் கண்ட புகைப்படத்தை ஆளாக்கியது. என் எதிரில் இருக்க வைத்து பேசிக் கொண்டு இருந்தேன், கொஞ்ச நேரம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது, என்னை அப்பா என்று அழைத்த போது. ஆனாலும் என்னை சித்தப்பா என்று அழைக்கச் சொன்னேன். அப்பாவை நிரப்ப என்னை மாதிரி பத்து பேராவது தேவைப்படும் என்பதால்.
மாறா அன்புடன்
ராகவன்
பா.ரா. உங்கள் நினைவலைகள் எப்போதும் அதி அற்புதம்!!
ராஜாராம்,
மனிதர்கள் உணர்வுகளுக்கு அடிமையானவர்கள். வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும், உணர்வுகளின் வழியேதான் நமது முடிவுகளும், வாழ்க்கைப் பயணமும் அமைகிறது. உங்கள் எழுத்துகளில் பூசியிருக்கின்ற உணர்வுப் போர்வைக்குள் புகுந்துகொண்டால் எல்லாம் மறந்து உள்ளம் கதகதப்பாய் ஆகிவிடுகிறது. எழுதவும், பேசவும், விருப்பு வெறுப்பற்று அன்பாயிருக்கவும் ஒரு மனசு வேண்டும். நானறிந்த வகையில் எனது பொதுவான நண்பர்களில் உங்களிடம் அந்த அன்பும் நேசமும் எல்லையற்று விரிந்திருக்கிறது. அதுதான் உங்கள் பக்கங்களை இவ்வளவு பேரை தினம்தோறும் வாசிக்கச் செய்கிறது. தெய்வா கடந்த வாரம் எனக்குப் பேசினார். ராஜாராமின் புத்தகங்கள் வேண்டுமென்றார். அனுப்பியுள்ளேன். சிவராமன் (பைத்தியக்காரன்) சொல்வது போல நீங்கள் உங்கள் எழுத்துக்களை கோர்வையாக்கி ஒரு நாவல் வடிவில் எழுதினால், வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பல வாழ்க்கையை வாழ்ந்த அனுபவம் கிட்டும். கவிதைகள் தவிர்த்து, உங்கள் உரைநடை மற்றும் புனைவு எழுத்துப் பகிர்வுகளில் ‘தஞ்சை பிரகாஷ்‘ எனக்கு நினைவுக்கு வருகிறார். அவரது கரமுண்டார் வீடு என்ற நாவல் எனக்கு மிகவும் பிடித்தமானது. வாசித்தவுடன் அது உருவாக்கிய எண்ணச்சித்திரங்களை சொல்லி மாளாது. அதிகம் பரவலாக அறியப்படாத அந்த நாவலின் கதைக்குள் நாமே முழ்கிப்போய் வாசித்து முடிக்கும்போது நாமும் அதில் ஒரு பாத்திரமாக ஆகிவிடுவோம். அதேபோல இழந்த நினைவுகளை மீளச்செய்கிற காலச்சக்கரமாய் பின்னோக்கி இழுத்துச் செல்கிற அனுபவத்தை தருகிறது உங்கள் எழுத்து. வாசிக்க வாசிக்க ஒரு சுகம். இதுதான் எல்லோரையும் ஈர்க்கிறது. சிவராமன் சொல்வது போல ஒரு வருடம் எடுத்துக்கொண்டு ஒரு நாவலாக உங்கள் அனுபவங்களை பதிவு செய்யுங்கள். (நான்தான் வெளியிடுவேன்)
அளவிலா நெகிழ்வுடன்,
பொன்.வாசுதேவன்
தென்னைகள் சூழ்ந்த ஆற்றங்கரையோரத்து பழைய கோவில் ஒன்றிற்கு கை பிடித்தழைத்து கொண்டு செல்கிறது அது. தேங்காய் சாதமும் துவையலும் தருகிறது. தேங்காய் சாதத்தின் ருசி எனக்கு அங்கிருந்து கிடைத்ததே. துவையலை பாம்பு போல உருட்டி "பாதி பாம்பு உனக்கு பாதி பாம்பு எனக்கு" என்று கெக்கலித்து சிரித்து சாப்பிட்ட காலங்களோடு பொருத்துகிறது//
என்னவோ போங்க, மகாப்பா... எனக்கு நினைவு தப்பிபோகிறது... மீண்டது வருகிறேன்...
மனம் வருடும் எழுத்துக்கள் பா.ரா
மனம் வருடும் எழுத்துக்கள் பா.ரா
அழகழகா எழுதுறீங்க!பூங்கொத்து!
நல்ல பதிவு,மற்றொரு நண்பரும் கிடைக்க வாழ்த்துகள்.
அற்புதம்..
எதுவும் யோசிக்க முடியாதபடிக்கு கொஞ்ச நேரம் கண்ணை மூடி கிறக்கமாகவும், கண்கள் கலங்கவும் ஆகி விடுகிறது இது போன்ற நேரங்களில்.
பின்னூட்டங்களில் வேறு, கால நேர தூரங்களின்றி ஒரு சில நண்பர்கள் நம்மையே வெளிக்காட்டிவேறு விடுகிறார்கள்.
ஹூம்..மேற்கொண்டும் எது சொல்லியும் ஈடாகாத வண்ணம் அமையபெற்றிருக்கிறது எழுத்தும் அதுபோலவே மனமும்.
சில நெகிழ்வுத்தன்மைகளை அடையும் நேரங்களில் மட்டுமே பொருளாதார அத்யாவசியங்களையும் அது சார்ந்த தொடர் செயல்களையும், புறந்தவிர்த்து மனது லேசாகிவிட முடிகிறது நம்மால்..
..வளையங்கள் பெரிதாகிக்கொண்டே போகின்றன.அது ஆயாசமின்றி, ஆச்சரியங்களையும், அய்ந்து விரல்களையும் ஒன்றுக்குள் ஒன்று விட்டு பிணைத்துக்கொள்ளும் படியாகவும் தோன்றுகிறது.
பா.ரா..வார்த்தைகளினால் மாய வலை வீசி விருப்பம் போலவே மனிதர்களை தூண்டிலில் வாரிப்போட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள்..அது உங்களுக்கு கைவந்த கலையாகவும் ஆகிவிட்டது போல..
மிக நெகிழ்வான பதிவு.
சகமனிதர்களை, நண்பா, மக்கா,
சகோதரி, என விளித்து
அன்பை மட்டுமே வெளிப்படுத்தும்
உங்களுக்கு எல்லோருமே புரை ஏறும் மனிதர்கள் தான்.
மாதுஅண்ணனின் பின்னூட்டத்தில்,
என் பின்னூட்டத்தை பார்த்துவிட்டு
முதல் தடவையே என்னை சகோதரி என்று அழைத்து பாராட்டியிருந்தீர்கள்.
உங்கள் அன்பால் எல்லோரையும் உறவாக்கிக் கொண்டுவிடுகிறீர்கள்.
புரை ஏறுது மாம்ஸ்
கண்கள் நிறைய
:)) நெகிழ்வான பதிவு பா.ரா..அண்ணே :))
@சிவராமன்
நன்றி சிவராமன்.பெரிய பெரிய வார்த்தைகள்.ஆனால் சந்தோசமாக இருக்கு.மிக்க நன்றி மக்கா!
@ஜோதி
ரொம்ப நன்றி ஜோதி!
@நேசா
நன்றி நேசா!
@வினோ
நன்றி வினோ!
@வானம்பாடிகள் சார்
சிவராமனை விட பெரிய வார்த்தைகள் சார் இது.அன்புதான் எல்லாவற்றிற்கும் காரணம்.ரொம்ப நன்றி பாலா சார்!
@பலாபட்டரை
மக்கா,மிக நெருக்கமாக இருக்கு.நன்றி பாஸ்!
@கலகலப்ரியா
நன்றி ப்ரியா!
@யாத்ரா
தம்பு,நல்லா இருக்கீங்களா?அடுத்து உங்கள் குரலைதான் கேட்கனும் மக்கா!நன்றி தம்பு!
@அசோக்
நன்றி மகனே!
@சரவனா
ஆம் சரவனா!வேறு என்ன இருக்கு.நன்றி மக்கா!
//அந்த அம்மா போல இருக்க விரும்பினேன், அத்தருணம்.//
அருமை ராஜாராம்.
//வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் குரல்தான் மக்கா, முன்ன பின்ன நகர்த்தும் ஆதார சுருதி. அம்மா, மனைவி, மகள், மகன், சகோதரிகள் அழைக்கிற குரல் அடையாளங்கள்தான் அன்றைய பொழுதின் வெளிச்சம் அல்லது இருட்டு.//
இது எல்லாருக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்.
உங்க விட்டுப்போன நட்புக்கவிதையும் வந்து சேரட்டும்.. விரைவில்.
நெகிழ்வு
விஜய்
என் தலை வழுக்கை என்றால்... நீங்கள் குமார்ஜியைப் பார்க்க வேண்டுமே... தும்பைப் பூவைப் போல் முழு வெள்ளை. கறுப்பு தேடினாலும் கிடைக்காது :)
மனுஷ மனசு பாவம் மக்கா. அதிக நெகிழ்ச்சி தாங்காது. ஆனால் இங்க வந்தா அதுமட்டும்தானே இருக்கு அள்ள அள்ள குறையாம.
நண்பனாய் இல்லாமல் நட்பாகவே மாறிவிடும் உங்களை என்ன செய்ய மக்கா.
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
என் தலை வழுக்கை என்றால்... நீங்கள் குமார்ஜியைப் பார்க்க வேண்டுமே... தும்பைப் பூவைப் போல் முழு வெள்ளை. கறுப்பு தேடினாலும் கிடைக்காது :)
//
சந்தோஷமா..ஹஹஹா
******
@ ராஜாராம் ஸார்.
உணர்வுகளின் உணர்வு நீங்கள்.
நெகிழ்ச்சியாய் இருக்கிறது.
மெட்டி ஒலி..நமக்கும் தான்.
உங்கள் கவிதை ஒன்று எனது blog-ல் இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் வரிசையில் இடம் பெறுகிறது . விபரங்களுக்கு எனது blog பாருங்கள் பா. ரா
நல்ல பகிர்வு.
உங்கள் எழுத்தை போலவே எண்ணமும் அழகு.
@செய்யது
ரொம்ப நன்றி செய்யது!
@gulf-tamilan
மிக்க நன்றி மக்கா!
@ராகவன் அண்ணாச்சி
ரொம்ப நன்றி அண்ணாச்சி.உங்கள் எழுத்தை வாசிக்கத்தான் நாங்கள் இருக்கோமே.எழுதி கொண்டே இருங்கள்.என் பலம் நீங்கள் சொல்லியே அறிகிறேன்.அப்படித்தான் எல்லாம்.
@சங்கர்
அப்படியா சங்கர்?சந்தோசம். வாழ்த்துக்கள்!மிக்க நன்றி மக்கா!
@சூர்யா
சூர்யா,நல்லா இருக்கீங்களா?நன்றி மக்கா!
@டிவிஆர்
மிக்க நன்றி டிவிஆர்!
@தெய்வா
சமாதானம் ஆகவில்லை என்று இல்லைடா.என் உணர்வை பதிகிறேன்.அவ்வளவே.மாற்றங்களை மைல் கல் மட்டும்தான் மாற்றாது.நாம் மனிதர்கள்தானே..பார்,சுந்தரா வந்து குமாரின் மாற்றங்களை பதிகிறான்.எவ்வளவோ நானும் மாறி இருக்கலாம்.இப்படியெல்லாம் இருக்காவிட்டால் அது என்னடா வாழ்வு?நம்பர் நம்பராக எழுதிக் கொண்டிருந்தவனை எதுடா மாற்றுகிறது கவிதை எழுத?ஒரு புள்ளிதானே?அல்லது பிசகல்தானே?
தொடர்ந்து எழுது மக்கா.ரொம்ப பிடிச்சிருக்கு உன் கவிதை!
குமார்ஜி கவிதைகளை சுந்தராவோ,நானோ பதிவோம்.உன் கவிதைகளை உன் தளத்தில் எழுது..வாசிக்கலாம்.
@காமராஜ்
ரொம்ப நன்றி காமராஜ்!
@ராகவன்
ரொம்ப நன்றி ராகவன்!
@ஷங்கி
நிறைய நன்றியும் அன்பும் மக்கா!
@அகநாழிகை
முதன் முதலாக இவ்வளவு நெகிழ்வான,பெரிய பின்னூட்டம் பார்க்கிறேன் வாசு உங்களிடமிருந்து..ரொம்ப சந்தோசமாய் இருக்கு.தொடர்ந்து கவிதையாக எழுதுவதற்கு,என் சூழ்நிலைகளே காரணம்.பல கவிதைகள் சிகரெட் அட்டை கிழித்து வேலை பார்க்கிற இடத்தில் இருந்து எழுத முடிந்திருக்கிறது.இப்படியெல்லாம் எழுதத்தானே கவிதைகள்...
ரொம்ப நன்றி மக்கா.பார்க்கலாம்,காலம் அனுமதிக்கட்டும்.என் எல்லா எழுத்தையும் நம் அகநாழிகை மூலமாக தொகுக்கவே விருப்பம்.அது தகுதி பெரும் பட்சத்தில்..
@முரளி
மிக்க நன்றி முரளி.உங்கள் குரல் கேட்டதில் மிக நிறைவு!
@குமார்
ரொம்ப நன்றி குமார்.
@அருணா
ரொம்ப நாளுக்கு பிறகு உங்களிடமிருந்து கிடைத்திருக்கிறது உங்களின் அதி விஷேசமான இந்த பூங்கொத்து,அருணா.ரொம்ப நன்றி டீச்சர்!
@ஸ்ரீ
மிக்க நன்றி ஸ்ரீ!
@கும்க்கி
என்ன கும்க்கி இவ்வளவு தூரம் மனசை இறக்கி வைத்திருக்கிறீகள்?ஆரம்பம் முதலே, என்னிடம் பேசியதைவிட,சுந்தரா தளத்திலோ மாதவன் தளத்திலோ என்னை பற்றி நீங்கள் பேசியதுதான் பார்த்து வந்திருக்கிறேன்."அந்த பயட்ட என்னமோ இருக்குடா"என்று வேலாயுதம் வாத்தியார் நண்பன் இருதயராஜிடம் சொல்வதை நானே கேட்க்க வாய்த்தது போல் ரகசியமாய் உங்களை ரசித்து கொண்டிருந்தேன்.போட்டு ஓடைச்சுட்டீங்களே மக்கா.
உங்கள் ரசிப்பின் உன்னதமாக இதை பார்க்கிறேன்..
//சில நெகிழ்வுத்தன்மைகளை அடையும் நேரங்களில் மட்டுமே பொருளாதார அத்யாவசியங்களையும் அது சார்ந்த தொடர் செயல்களையும், புறந்தவிர்த்து மனது லேசாகிவிட முடிகிறது நம்மால்.
..வளையங்கள் பெரிதாகிக்கொண்டே போகின்றன.அது ஆயாசமின்றி, ஆச்சரியங்களையும், அய்ந்து விரல்களையும் ஒன்றுக்குள் ஒன்று விட்டு பிணைத்துக்கொள்ளும் படியாகவும் தோன்றுகிறது.//
ரொம்ப சந்தோசமும்,நெகிழ்வும்,அன்பும்,நன்றியும் என் வேலாயுதம் வாத்தியார் என்ற என் கும்க்கி!
@அம்பிகா
நம்மிடம் வேறு என்ன இருக்கு அம்பிகா.மனிதர்களை தவிர.சந்தோசம்.நன்றி அம்பிகா!
@பாலா
மிக்க நன்றி மாப்ள!
@சிவாஜி
ரொம்ப நன்றி சிவாஜி!
@சுசி
நன்றி சுசி!
@விஜய்
நன்றி விஜய்!
@சுந்தரா
"என்னை வெள்ளை மயிரென்றவனே"என்கிற குமார்ஜியின் கவிதையை எதிர் பார்க்கிறேன்.நீ முந்தினால் நோக்கு.நான் முந்தினால் நேக்கு. :-) நன்றிடா!
@நவாஸ்
//நண்பனாய் இல்லாமல் நட்பாகவே மாறிவிடும் உங்களை என்ன செய்ய மக்கா.//
சும்மா இருங்கள் மக்கா.போதும்!
@நர்சிம்
மிக்க நன்றி நர்சிம்!
@மண்குதிரை
நமக்காகத்தானே மெட்டி ஒலி!நன்றி மண்குதிரை.
@மோகன்
பார்த்துட்டேன் மோகன்.நன்றி!
@அக்பர்
ரொம்ப நன்றி அக்பர்!
.// அப்படியேயான அன்பும், உயிர் சுண்டலும் நேசன் அழைக்கும் "என்னண்ணே" என்கிற குரலில் கிடைக்கிறது எனக்கு.//
அற்புதம் பாரா ரொம்ப அற்புதமான உணர்வு அது என்னையும் என் நினைவலைகளுக்குத் தள்ளி விட்டது உங்கள் இந்த இடுகை
ரொம்ப நன்றி தேனு!
அய்யோன்னு மனசு பதறுறா மாதிரி எழுதறீங்க பா.ரா. இந்த மாதிரி பதிவுகள் உரைநடைக்கவிதைகள்
nallaayirukku...........
நண்பர்களை நானும் தொலைத்து இருக்கிறேன், நீங்கள் தேடிக் கண்டுபிடித்து விட்டீர்கள்.
வார்த்தைகள் நட்பின் புதிய பரிமாணத்தைக் காட்டுகின்றன, தெய்வா கண் கலங்க வைக்கிறார்.
பா ரா
அப்பாவாகி அப்பாவைப்பற்றி பின் அதுவே நட்புக்காக என கலக்கறீங்க
அருமை பா ரா, தொலைந்த நட்பு என்றேதுமில்லை பா ரா மறந்த நினைவுகள் தாம் உண்டு என்றேனும் நினைவில் வந்தால் மீண்டும் நட்பு தொடர்ந்திடும் , நட்புக்கு மட்டும் அழிவில்லை பா ரா, நீங்கள் ஞாபகபடுத்தி விட்டீர்கள், கிடைத்துவிட்டது
தொடருங்கள் பா ரா
நன்றி ஜேகே
Post a Comment