ராகவன்...
ராகவனுக்கு அப்புறம் மூன்று புள்ளிகள் வைத்திருக்கிறேன் கவனித்தீர்களா? ராகவனுக்கு தெரியும் அந்த மூன்று புள்ளிகளின் அர்த்தமும்.
போகட்டும்,
காந்தி பெரியம்மா என்கிற மனுஷிதான் எங்கள் எல்லோருக்கும் ரோல் மாடல். அன்பை எப்படி கொடுப்பது எப்படி வாங்குவது என எந்த திட்டமிடலும் அற்று, எந்த பிரதி பலன்களும் கருதாது தன்னிடமுள்ள பூ கொண்டு தேன் தயாரித்தார்கள் பெரியம்மா. தேனை, தேனீக்கு தந்தார்கள். தேனீ கூடு கட்டியது. தேன் சொரிந்தது. எட்டும்,அஞ்சும்,மூன்றும் பதினாறு குழைந்தைகள் நாங்கள். பெரியப்பா,அப்பா,சித்தப்பா என மூன்று அப்பாக்கள். வேறு வேறு அம்மாக்களின் கருவறை.
தீப்பெட்டிக்குள் அடைபட்ட குச்சி போல ஒரே மாதிரியாக உரசலில் பற்றி எறியும் அன்பிற்கு அந்த தேனம்மைதான் காரணம். "ராஜா செல்லம்" என்கிற குரலையும் ராகவனின், "எப்படி இருக்கீங்க பாரா?" என்கிற குரலையும் ஒன்றாகவே உணர வாய்க்கிறது என்னால். ஒரு மனுஷன்தானே கொண்டு சேர்க்கிறான் ஒரு மனுஷியிடம்!
தண்டோரா
சேகர் அத்தானிடம் தண்ணி அடித்து சந்தோசமாக சிரித்தது போல் இப்பவரையில் வேறு மனிதர்கள் வாய்க்கவில்லை எனக்கு. சற்றேறக்குறைய சேகர் அத்தானிடம் சேர்க்கிறது இவர் குரல். தண்ணியின் ஆளுமையில் ப்ரிய மனிதர்களிடம் பேசுகிற தேவையும், தன்னையும் இளக்க தேவையான இவரின் தேடல், இவரிடமிருந்து அவரிடம் சேர்க்கிறது என்னை.
அப்பிரவாக பிடியில் சொக்கியபடி "மாப்ள" என்றோ "மாப்ள வெண்ணை" என்றோ அத்தான் அழைப்பது வழக்கம். போலவே,"தலைவரே" எனவும் "சொல்லுங்கண்ணே" என்கிற தடுமாற்றம் கூட காரணமாக இருக்கலாம். போக, எந்த பிடிமானங்களும் அற்று மிதப்பது போலான ஒரு அனுபவத்தை இவர் குரல் எழுதிக்கொண்டே போகும். புல்ஸ்டாப், கமா, ஆச்சர்யக் குறி, கேள்விக்குறி, இதெல்லாம் இல்லாது எழுதிக்கொண்டு போவது எவ்வளவு வசதியோ அவ்வளவு வசதியாக இருக்கிறது இவர் குரல். இப்போ சேகர் அத்தான் இல்லை. இவர் இருக்கிறார்.."சேகர் அத்தான் திரும்ப கிடைச்சாச்சு அக்கா" வென சுமதி அக்காவின் முன்பாக இவரை பார்க்கிற போது, கொண்டு போய் நிறுத்தவேணும். அக்கா கண் கலங்குவாள். கலங்கட்டும். கலங்கத்தானே கண்கள்.
அகநாழிகை வாசு
"எலக்கட்டு வந்துருச்சான்னு பாருங்கப்பா. தென்னங்குருத்து வெட்ட யார்ரா போயிருக்கா?சமையக்கட்டுல ஒரு ஆளு நில்லுங்கடா. பக்கிகளா சத்தம் போடாம வெளாடுங்க" என்று ஒரு கல்யாண மண்டபம் முழுக்க நிறைந்திருப்பார் ஞானமாமா. யாரும் அவரை கூப்பிடவேணாம். ஒரு குறையான பேச்சு உதிராது. முகூர்த்தக்கால் நட்டது தொட்டு வந்து வந்து பார்த்து போய் கொண்டிருப்பார். ஒவ்வொரு வருகையிலும் அக்கல்யானம் ஒரு அடி நகர்ந்திருக்கும். அதே ஞான மாமாதான் தன் ரெண்டு மகளுக்கும்,ரெண்டு மகனுக்கும் திருமணம் நடத்தினார். முழுக்க வேறு முகங்கள் வைத்திருந்தார் அது சமயம்."பார்த்து செய்ங்கடா எல்லாத்தையும் எனகிட்ட கேட்டுகிட்டு" என்று சிரித்தபடி அமர்ந்திருப்பார். நாங்கள் பத்து நூறு பேர் அவர் ஒரு ஆளுக்கு ஈடாகாது.
"சொல்லுங்க ராஜாராம்" என்ற வாசுவின் குரலை நான் முதன் முதலாக கேட்டபோது நான் சவுதியில் இருந்தேன். அவர் சென்னையில், எனக்கு மிகப்பிடித்த இடத்தில் இருந்தார். இருவருமாக இந்த ஞான மாமாவிடம் சேர்ந்தோம்.
அன்பு என்பது வார்த்தையல்ல அது ஒரு செயல் என்றுணர்த்துகிற ஞான மாமாவிடம்!
ரௌத்திரன்
இங்குதான் இருக்கிறார். ஆனால் இப்ப வரைக்கும் குரலில்தான் பார்த்து கொண்டிருக்கிறோம். "ராஜாராம் சார்" என்கிற ஒரு தூரமான குரலை,பேசி பேசி நெருக்கமாக மாற்றியது இவராகத்தான் இருக்கும். சார் என்பது ஒரு பெயர் மாதிரித்தான் போல என்றுணர்ந்த பிறகு இப்பல்லாம் நானும் கூட "வானம்பாடிகள் பாலா சார்" என்றழைக்க பழகி கொண்டேன். ஏனெனில் இந்த சார் என்பதில் அவ்வளவு உவப்பு இருந்ததில்லை எனக்கு எப்பவும். கல்வி எவ்வளவு உவப்பு இல்லையோ அவ்வளவு.
ஒரு கவிதை எழுதுபவன் அவன் குரலில் இருந்துதான் எடுக்கிறானோ அவன் கவிதையை என்று உணர வாய்க்கிறது இவர் குரல் எப்பவும்..என்னென்னவோ பேசி கொண்டு இருப்போம். எங்கே தொடங்கினோம்,எங்கே முடிப்பது என்றறியாமல். இரவு மூன்று மணி வரையில்,எழுகடை வாசலில் அமர்ந்தபடி தண்ணி அடித்து,உணவருந்தி,வெத்தலை பாக்கெல்லாம் போட்ட பிறகெல்லாம் கூட வீடு நகர எது அனுமதிக்கவில்லை என்பதை அறியோம் நானும் சூரி அண்ணனும். எனக்கென்னவோ சூரி அண்ணன்தான் ராஜேசோ என்றிருக்கு.
செ.சரவணகுமார்
செ புள்ளி சரவணக்குமாரை, சரவனா என்றழைக்க விரும்பியதற்கு என்ன பெரிய காரணங்கள் இருந்து விட முடியும். எழுத்தும் குரலும்தானே! போக இவரிடம் இன்னொரு நெருக்கமும் உண்டு எனக்கு. சாதிக் என்கிற என் நண்பனுக்கு அப்போ யாரும் இல்லை. யாரும் என்றால் அப்பா அம்மா முதற்கொண்டு. எங்காவது பற்றி கொள்ள மாட்டோமா என்றிருந்தவனுக்கு நான் கிடைத்திருந்தேன். வீட்டின் சோற்று பானை அறியாது நண்பர்களை கவ்வி கொண்டு போகிற பூனை நான். இவனோ சதா நேரமும் பசியில் இருப்பவன். திடீரென்று ஒரு நாள் வீட்டில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டான். எவ்வளவோ வற்புறுத்தியும் சாப்பிடுவதில்லை. இப்போ காரும் பங்களாவுமாக மலேசியாவில் இருக்கிறான். போன என் பயணத்தில் அவனும் வந்திருந்தான். மனைவி குழந்தைகளுடன் வீடு வந்திருந்தவன் எல்லோரையும் சாப்பிட பண்ணி இவன் சாப்பிடவில்லை.
என்னவோ இனம் புரியாத குற்ற உணர்ச்சி மட்டும் இருக்கிறது பரஸ்பரம், பழைய சாதிக்கிடமும் புதிய சரவனாவிடமும். ஏனெனில் எத்தனையோ முறை என்னை பார்க்க முயன்று, கடைசியாக டாக்ஸ்யில் பயணபட்டவரை திருப்பி அனுப்ப நேரிட்டது. இயலாததற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். ஆனாலும்,"என்னண்ணே" என்கிற குரலில் ஒடுங்கி போகிறேன் புதிய சரவனனிடமும் பழைய சாதிக்கிடமும்.
இன்னும் கூட சிலர் உண்டு. பார்க்கலாம் அடுத்த பதிவில்.
புரை ஏறும் மனிதர்கள் - 1, 2, 3
43 comments:
நான் தான் firstu & secondu
and thirdu
குற்றவுணர்ச்சியெல்லாம் வேண்டாம் பா.ரா அண்ணா. ஒவ்வொருமுறை அலைபேசும்போது சரவனா என்று அன்பொழுக அழைக்கும் அந்தக் குரல் மட்டும் போதாதா.
ரொம்ப நன்றி அண்ணே...
வார்த்தைகளின் ஊடேயான பயணம் அருமை.
ம்ம்.எழுத்துல மனுசன வரையுறீங்க பா.ரா. சாவிக்கப்புறம் உங்க எழுத்துல மனுசப் படம்.
விளக்குக்கு மேலே கவிழ்த்த நேர்த்திகடன் தீப பானைக்கு ஆயிரம் கண்
உங்களுக்கும் சாத்தியப்படுகிறது கோடைஇரவின் ஆகாயத்தை பானையாக தலை மேல் சுமந்து செல்லும் யவ்வனம் ததும்பும் பெண்களின் நடை
எல்லாரும் பார்க்க கிடைக்கிறது எல்லாமும் என்ன உடல்கள் மட்டும் வேறு அவ்வளவுதானே
மனசை மனசோடு பார்க்க முடிகிற பார்வை - பா.ரா
அது எப்பிடி ரெண்டு வரிக்க்குள இத்தனை பா-னா ம்ம்
ஊடுருவுவதும் ஒரு கலை தான்
குயிலிசைப் போதுமே .., அட குயில் முகம் தேவையா ..
உணர்வுகள் போதுமே .., அதன் உருவம் தேவையா ... என்று பாட்டில் சொன்னார்கள் .
பா ரா சார் , உங்க பதிவின் மூலம் சங்க காலத்துக்கே சென்று விட்டோம் . கோப்பெருஞ்சோழன்_ பிசிராந்தையார் நட்பை போல வலையுலக நண்பர்கள் இடையே உண்டு .
அருமையான பகிர்தல்
உண்மையில் பா.ரா.
உச்சங்களை தொட்ட கணங்களை பற்றியதான சின்ன சித்திரத்தையேனும் எனக்கு சொல்லி முடிக்கவேண்டும்.
மனம் விட்டு அழுத கணங்களின் நினைவில் முதலில் வருவது +2 கணிதத்தில் கோட்டை விட்ட பின்பான அட்டெம்ட் எக்ஸாமுக்கு திருவண்ணாமலை பெரியப்பா வீட்டில் தங்கி படிக்கையில் பார்த்த
மகேந்திரனின் உதிரிப்பூக்கள்...
இரவு டி.டி.நேஷனலில் பார்த்த படத்திற்க்கு.,
அப்புறமாக வேறு எவரும் அறியாவண்ணம் கழிவறையில் போய் 2மணித்துளிகளாக அழுதது....
போகவும்,
கூடவே சரக்கும் காரும் சம்பத்துமாக இழுத்து திரிந்து கொண்டிருந்த மணி அண்ணன் க்ரானைட் பிஸினஸில் தோல்வியுற்று சரக்கு போதவில்லை வாங்கி வாங்கடாவென எங்களை கார் கொடுத்து அனுப்பிவிட்டு..
எங்களால் வாங்கிப்போன சரக்கில் விஷத்தை கலந்து தான் மட்டும் அருந்தி உயிரை விட்டது ...
அப்புறமும்....
இது போல அழுத கணங்கள் மிக மிக குறைவாகவே வாழ்வு கடந்து போயிருக்கிறது பா..ரா.
திரும்பவும்..
கண்கானாத தூரங்களில் இருந்து கொண்டு வார்த்தைகளினால் மனித மனங்களை அக்கு அக்காக பிய்த்து போட்டு அழ வைத்து விடுவீர்களோ என பயமாய் இருக்கிறது பா..ரா.
உங்களையும் இந்த ராகவனையும் பார்த்து உண்மையில் மனம் கலங்கித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்....
வாழ்வு எது குறித்தான பயங்களையும் புத்திசாலித்தனங்களையும் கடந்து தன் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது...
தில்லு முள்ளு படத்தில் வரும் கடைசி காட்சியில் கமலோடு வரும் வக்கீல்களின் மனநிலையோடுதான் பதிவுலகம் தவிர்க்கமுடியாமல் இயங்கிக்கொண்டிருப்பதாகத்தான் படுகிறது...
அன்பின்
கும்க்கி...
என்ன அழகாச் சொல்லியிருக்கீங்க.
நட்புக்கு இவ்வளவு மரியாதைக் கொடுக்கறீங்க.
சிம்பிளி சூப்பர்ப்.
அருமையான மனிதர்கள்தான்.
சொல்லும் விதத்துக்கு கட்டுப்பட்டு அடுத்த பகுதி படிக்க தயார் ஆகியாச்சு :)
அழகாச் சொல்லியிருக்கீங்க
எல்லோருமே குடுத்து வைத்தவர்கள் தான்.... அருமை தொடரருங்கள் ..
சேகர் மாமாவைப்பற்றி படித்தவுடன் மனதைப் பிசைந்தது. மறக்க முடியுமா அன்புத் தாய்மாமனை. அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாத அந்த அன்பு உருவத்தின் ஆசிர்வாதம் நம்மைத் தொடரட்டும்.
நெகிழ்ச்சி :)
அழகான உணர்வுகள், உறவுகள் :))
உங்கள் உரைநடை சிறப்பாக இருக்கிறது. நீங்கள் இது போன்ற சிறுகதைகள் எழுதுங்களேன்.
மனுஷன்தானே கொண்டு சேர்க்கிறான் ஒரு மனுஷியிடம்!//
அக்கா கண் கலங்குவாள். கலங்கட்டும். கலங்கத்தானே கண்கள்.//
அன்பு என்பது வார்த்தையல்ல அது ஒரு செயல் என்றுணர்த்துகிற ஞான மாமாவிடம்!//
ஒரு கவிதை எழுதுபவன் அவன் குரலில் இருந்துதான் எடுக்கிறானோ அவன் கவிதையை என்று உணர வாய்க்கிறது//
ஆனாலும்,"என்னண்ணே" என்கிற குரலில் ஒடுங்கி போகிறேன் புதிய சரவனனிடமும் பழைய சாதிக்கிடமும்.
இந்த வார்த்தைகளை
உங்களிடம் மட்டுமே
காணமுடியும் யதார்த்தம்
வைத்திருக்கிறது பா.ரா
நெகிழ்வு மக்கா...
உங்களுடன் சேர்த்து எங்களையும் 'புரை ஏறம் மனிதர்களாக' செய்து விடுகிறது உங்களின் எழுத்து
அனைத்திற்கும் நன்றி. வாசு அப்பிடியான மனிதர் தான்
அன்பையும், நட்பையும் அழகாக இனம் காணும் உங்கள் அன்பே அலாதி.
கும்க்கியின் பின்னூட்டத்தில் மனம் கனத்துப் போனது.
தோளில் கை போட்டு அரவணைத்து செ(சொ) ல்லும் நட்பின் பிரியம் .
விரலுக்கு சொடுக்கெடுக்கும் சொந்தக்காரி
தலைகலைத்து முத்தமிடும் மடிக்காரி
கைபிடிக்குள் வெம்மை வழி அன்பை அள்ளித்தெளிக்கும்
புகைப்பிடித்து வெந்தஉதட்டு தகப்பன் காரன்
ஏன் இம்புட்டும் சொல்றேன்னா
அதே உணர்ச்சி இப்போ எனக்கும்
உம் எழுத்தின் மீதான மாறாத பிரேமையுடன்
பாலா
(அவ்ளோதான் சொல்ல முடியும் )
அக்கா இப்பவும் திட்டும் ”ஏண்டா கைல காசு இல்லாத நேரத்தில பட்ட கஷ்டமெல்லாம் மறந்துபோச்சா உனக்கு, இப்ப இப்படி ஓட்ட கையா இருக்கியே”ன்னு
அதுமாதிரி அன்பு வைப்பதில் நீங்க பெரிய ஓட்டைக்கை மக்கா. எவ்வளவோ சொல்லலாம், நெகிழ்ச்சியா இருக்குது. ஒன்னும் சொல்ல முடியலை.
நல்ல நெகிழ்ச்சியான பதிவு தலைவரே.
நட்புக்களை மனதில் ஏந்தி நிற்கிறீர்கள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. நடை சூப்பர்.
வாழ்த்துகள் ராஜாராம்.
எதார்த்தமான வரிகள் . அழகிய வார்ப்பு வாழ்த்துக்கள் .
உங்கள் பதிவை பார்த்து தான் கண்கலங்குகிறது என்றால் கும்க்கியின் பின்னூட்டம் அதை விட..
உங்களையெல்லாம் சட்டைய பிடிச்சு கேக்கணும்யா ஏன் இப்படி உயிர புடுங்குற மாதிரி
எழுதுறீங்கன்னு..?
மனசு கனக்க கனக்க எழுதுகிறீர்கள் பா.ரா.
ஒரு மனுஷன்தானே கொண்டு சேர்க்கிறான் ஒரு மனுஷியிடம்! //
ப்பா, எப்படியெல்லாம் எழுதறீங்க.
மனசு நிறைஞ்சு போகுது உங்க எழுத்தில்.
ஒன்றும் சொல்ல தோன்றவில்லை ராஜா சார்...ஒன்றும்...
அன்பு பாரா,
ஆசை ஆசையாய் இதை எழுதுகிறேன். மிகபெரிய அன்கீஹாரம் அதுவும் எங்கு தொட்டாலும் பால் சுரக்கும் ஒரு மனுஷனிடம் இருந்து ஒரு வார்த்தை, எனக்கு பெரிய சுமையாய் இருக்கிறது... குரலில் அன்பு குழைக்கும் எனக்குள் நிஜமான செயல் அன்பு இல்லை என்பாள் என் மனைவி. அது நிஜம் தான் பாரா... எனக்குள் எப்போதும் வழியும் ஒரு சுயநலம் என் செயல்களில் அன்பை இல்லாமல் செய்து விடும் என்ற அவளின் கருத்து, என்னை புரட்டி போடும். என்னை தெரிந்த எல்லோருக்கும் நான் பிரியத்தின் மொத்த குத்தஹைக்காரன், அக்கறை வழியும் தடங்களில் புதியதாய் சுனை நீர் ஊற்றெடுக்கும் அன்பு, தொட்டனைத்து ஊறும், அள்ள அள்ள குறையாது பாரா... ஒவ்வொரு சொல்லிலும் பாரா... ஆனால் செயலில் எவ்வளவு தூரம் அன்பானவனா ... எனக்கு தெரியவில்லை... பிறரின் கஷ்டம் என்னை பாதிக்குமா... மாது போலவோ, காமராஜ் போலவோ என்பது எனக்கு மிகப்பெரிய கேள்விக்குறியே ??? எத்தனை பேரின் கஷ்டங்களில் பங்கெடுத்து
இருக்கிறேன், எத்தனை பேருக்கு தேவைப்படும் நேரத்தில் உதவியாய் இருந்திருக்கிறேன் என்றால் தெரியாது பாரா... நகைச்சுவையாய் பேசுவதை நினைத்து சில சமயம் அவர்களின் உணர்வுகளை மிதித்திருப்பேன்.
அப்பாவுக்கு நன்றி சொல்லணும் பாரா...என்னிடம் அன்பின் சாயல் தெரிந்திருந்தாலோ, அல்லது மேலுக்கு நான் அன்பாய் இருந்தாலோ அதன் மூல காரணம் அவர் தான் பாரா. அம்மாவிடம் சண்டை போடுவார், சில சமயம் அடிப்பார் ஆனாலும் அவரின் அன்பு தாங்க முடியாது பாரா... ரொம்ப வெட்கமா இருக்கும் இந்த அன்புக்கு நம்ம தகுதியான்னு... என்னை நிறைய நம்பினார்... நான் பதின் பருவத்தில் நேசிப்பது தெரிய வந்த போது அவளிடமும் அன்பாய் இருந்தார். அவரின் இந்த அன்பு தான் எங்கள் இருவரையும் யோசிக்க வைத்து, நண்பர்களாய் பிரிய வைத்தது... அம்மாவின் தற்கொலை மிரட்டல்கள் செய்யாததை அவரின் அன்பு செய்தது... அவளின் குழந்தையை தன் பேத்தியை பார்த்தார், அதற்க்கு பிறகு தான் அவள் எனக்கு மகளாய் போனாள். அவரிடம் இருந்து தான் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற நல்ல தனம் வந்திருக்கணும். என் அப்பாவின் அன்பு ரொம்ப எளிமையா இருக்கும்... அரைக்கிலோ அல்வா வங்கி வந்து 11 வீடு இருக்கிற காம்பௌண்டில் இருக்கிற எல்லா குழைந்தைகளையும் கூப்பிட்டு கொடுப்பார். அப்பாவை யார் வேண்ணா ஏமாத்திடலாம்... ரொம்ப வெள்ளந்தியான மனுஷன்... நம்பி நான் ஒன்னும் கேட்டு போயிடலம்மான்னு ஏங்க அம்மாக்கிட்ட சொல்வார்...
ஏதோ மீனாக்ஷி அம்மன் தயவில நல்லா சாப்பிடுறோம், உடுத்திறோம் அது போதும்பார். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா என் தம்பிக்கு ஒரு பொண்ணு பாத்து முடிவாயிருக்கு... அந்த பொண்ணோட அப்பாவும் உங்கள மாதிரியே அன்பொழுக பேசுறாரு பாரா... குரலின் தொனியும் ஒரே மாதிரி... மருமகனேன்னு... ஒரு வார்த்தைக்கு ஒரு வாட்டி... இந்த உலகமே அன்பினால் நிறைகிற மாதிரி இருக்கு பாரா... நிறைய அன்பும் பிரியமும் ததும்பும் மனிதர்கள் மனசுக்குள் தெரிகிறார்கள் பாரா... பாராவின் அன்பின் சாயலில் எல்லாமே உயிர்நிலை தான்...
அடைக்கும் தாழில்லாமல் மீறுகிறது...
மாறா அன்புடன்
ராகவன்
//தீப்பெட்டிக்குள் அடைபட்ட குச்சி போல ஒரே மாதிரியாக உரசலில் பற்றி எறியும் அன்பிற்கு அந்த தேனம்மைதான் காரணம்//
பாரா என்ன இது என்னைப் பற்றித்தானா..? நான் உங்க காந்தி பெரியம்மா போல அன்பாலான மனுஷிதான்... ஆனா உங்க அன்பிற்கு முன்னாலே அழுகைதான் வருது.. நேற்றிலிருந்து புரை ஏறிக்கொண்டே இருந்தது ...
வெளியூரில் படிக்கும் பிள்ளைக்கும் வெளியூர் சென்று இருக்கும் ரங்கமணிக்கும் அவ்வப்போது போன் செய்து கொண்டே இருந்தேன்..
என் அன்பு சகோதரர் நீங்க நினைத்துக் கொண்டது என இப்பத்தான் தெரியுது.. வாழ்வில் ஒருவரையாவது அன்பால் நிறைத்து விடுதல் மிகப் பெறும் பேறு ..
அது உங்களுக்கு அதிகமாகவே வாய்த்து இருக்கு ... மனுஷர்களுக்காய் ஏங்கும் உங்களைப் போன்ற ஒருவர் எல்லோருக்கும் கிடைத்தது பெருமைதான் ..
புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா
பிரியமும் நெருக்கமும்தான் பா.ரா வோ..!
கிறங்கிப் போகிறேன்.....
இது ராகவனுக்காக...
நிறைய நிறைய சொல்லத் தோன்றினாலும், ராகவன், உங்கள் கைகளைப் பிடித்தபடி கொஞ்ச நேரம் இருக்கணும் என்று மட்டும் இந்தக் கணத்தில் தோன்றுகிறது.
மனதைத் தொடும் உறவுகளை இந்தப் பதிவுலகம் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறது.. வாழ்த்துகள் பா.ரா..
நிறையப்பேர் சொல்லிவிட்டார்கள்,கும்கியும் தங்கை அம்பிகாவும்,ராகவனும் மாதுவும் இன்னும் வலைச்சொந்தங்களும் இந்தப்பதிவை அடர்த்தியாக்கிவிட்டாகள். நெரிசலான இந்தப்பேருந்தில் அருகிருப்பவர்மேல் சினம் கொள்ளாமல் இருப்பது கடினம்,பேசுவது இன்னும், நெருங்குவது அதைவிட,தோளில் கைபோடுகிற மனசு கோடியில் ஒருத்தருக்கே வாய்க்கும் அப்படியாப்பட்ட மனுஷன்- பாரா
நல்லாரைக் காண்பதுவும்,நலமிக்க நல்லார் சொல்கேபதுவும் நன்றே.
மகிழ்கிறேன். நெகிழ்கிறேன்.
வேறென்ன சொல்ல ராஜாராம்.
நன்றி. நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பொன்.வாசுதேவன்
நமக்கு இன்னும் குரல் தரிசனம் கிடைக்கவில்லை
காத்திருக்கிறேன்
விஜய்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த கணத்தில் உங்கள் நேசம் ததும்பும் பதிவின் அன்பில் கரைந்து உருகிப் போயிருக்கிறேன். கண்களில் நீர் துளிர்க்கிறது, இந்த ஆனந்தத்தை நெகிழ்தலை உருகுதலை உங்களைப் போல் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை. வாழ்த்துகள் ணா. உங்க மனசு இருக்கே, எப்படி உங்களால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது, எனக்கு வண்ணதாசனை படிக்கும் போது தோன்றும், இவருக்கு நாம் பிள்ளையாகவோ தம்பியாகவோ பிறந்திருக்கக் கூடாதாவென, பிறகு இப்போது தோன்றுகிறது உங்களுக்கு தம்பியாக பிறந்திருக்கக் கூடாதா என. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ணா.
பணிச்சூழல் காரணமாக தனித்தனியாக கை பற்ற முடியாத குறை எனக்கு.பின்னூட்டம் மூலமாக அன்பு காட்டும் என் அணைத்து நண்பர்களுக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்!
aththanaiyum azhagu...
:)
தங்கள் பதிவைப் படித்த பின், ராகவனின் பின்னூட்டம் பார்த்த பின் ஏனோ கண்கள் கலங்குகிறது.
பா ரா
அன்பொழுக பதிவும் அதன் தாக்கத்தில் மேலும் அன்பாய் பின்னூட்டமும் அருமை பா ரா
எத்தனையோ நாள் நானும் என் மனைவியும் அன்பு உள்ளங்களின் பழகுதலை நினைத்து இனி நாமும் பிடிவாதமாய் அவர்கள் போல் இருக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனால் மீண்டும் அவர்களை சந்திக்கையில் இந்த உறுதியெல்லாம் தூசாய் அன்புக்காற்றில் பறந்து போக மீண்டும் அவர்கள் செய்தது மறந்து பழக ஆரம்பித்து விடுவோம் , எங்களை சில சமயம் ஏமாளி என்று நினைப்பது போல் தோன்றும் , வலிக்கும் ஆனால் எங்களால் மாற்றிக்கொள்ள இயலவில்லை
அது தவறில்லை என்று காட்டியுள்ளீர்கள் , மிகவும் ரசித்தேன்
நன்றி பா ரா
அன்பைப் பகிர்தலில் முதலிடம் உங்களுக்கு....!
Post a Comment